ஆயதுல்லாஹ் ஷேய்க் நிம்ர் பாகிருல் நிம்ர் அவர்கள், 2007ம் ஆண்டு கோடையில் சவூதி அரேபியாவின் அரசாங்கத்திற்கும், அந்நாட்டு மக்களுக்கும் இடையேயான தொடர்பை சீர்செய்து, மேம்படுத்துவதற்கான திட்டமாக, மேலோட்டமான ஒரு அரசியல் வரைபைத் தொடங்கியிருந்தார்.
ஆயதுல்லாஹ் ஷேய்க் நிம்ர் அவர்கள் இத்திட்டத்தை ‘தாராளம் மற்றும் சுயகௌரத்திற்கான மனு’ எனும் பெயரில், சவூதி அரேபியாவின் சுஊத் குல அரசாங்கத்திடம் முன்வைத்தார். அதனையடுத்து, அது உருவாக வழிவகுக்கக் கூடிய முனைப்பும், அணுகுமுறையும் கொண்டதான தனது செயற்திட்டத்தை, ஜும்ஆ பிரசங்கம் ஒன்றில் விளக்கிய அவர், ‘தேசிய அரசாங்கம்’ எனும் கருத்தாக்கமானது நீதி, சமத்துவம், கௌரவம் மற்றும் சுதந்திரத்தின் அடிப்படை விதிகள், அரசாங்கத்தை சட்டபூர்வமாக ஆதரித்தல் மற்றும் நேர்மையான, நியாயமான நீதித்துறையினூடாக அதனை வலுப்படுத்தல் என்பனவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளது என நீதியை வேண்டிநிற்கும் முனைப்பான ஒரு வரைபினூடாகக் குறிப்பிட்டிருந்தார்.
இம்மனுவானது, உண்மையான ‘தேசிய அரசாங்கத்தை’ தோற்றுவிப்பதற்கான சவூதி அரேபியாவினுடைய மக்களின் அரசியல் கோரிக்கைகள் மற்றும் அவர்களின் சட்டபூர்வமான அபிலாஷைகளின் சுருக்கமாகத் திகழ்ந்தது. தேசிய அரசாங்கமானது, சட்டவாக்கக் கூறுகளினூடாக நீதி, சுதந்திரம் மற்றும் கௌரவம் முதலானவை மேற்பார்வை செய்யப்பட்டு, அவை நிலைகொள்வதற்குத் தேவையான நீதித்துறைமை சமூக அங்கத்தவரிடையில் எவ்வித பாரபட்சமுமின்றி வெளிப்படுகின்ற ஒரு அரசாங்கமே என்பதாக அதை அவர் வரைவிலக்கணப் படுத்தினார்.
இம்மனு, அரேபியாவின் உள்நாட்டு, வெளிநாட்டு பொதுமக்களின் கவனத்தை தன்பால் ஈர்த்து, எல்லா வட்டங்களினதும் பேசுபொருளாக மாறியது. இது சுஊத் குல முடியாட்சியின் நிலைமையை மேலும் கவலைக்கிடமாக்கியதும், ஆயதுல்லாஹ் ஷேய்க் நிம்ர் அவர்கள் 2012 ஜுலை 08ம் திகதியன்று, சிவில் அரசின் (the Civil State) சட்டவிதிகளுக்கு விரோதமாக, மிகக்கொடூரமான முறையில் கைதுசெய்யப்பட்டார். ஆயதுல்லாஹ் ஷேய்க் நிம்ர் அவர்கள் கைதுசெய்யப்பட்ட விதத்தை சேட்டிலைட் வலையமைப்புகள் ஊடாக உலகோர் கண்ணுற்று இருந்தனர்.
ஆயதுல்லாஹ் ஷேய்க் நிம்ர் அவர்கள் வாகனத்தைச் செலுத்திக்கொண்டிருக்கும் போது, பின்தொடர்ந்த சுஊத் படையினர் அவர் மீது துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்த, அவரின் இரு கால்களிலும் நான்கு தோட்டாக்கள் பாய்ந்து, அவ்விடத்திலேயே அவர் தன், சுயநினைவை இழந்தார். அவர் செலுத்திய வாகனம் வீதியோரம் கைவிடப்பட்ட நிலையில், அவரை சிறைக்கு கொண்டுசென்றனர்.
ஆயதுல்லாஹ் ஷேய்க் நிம்ர் அவர்களை விசாரணைக்கு உட்படுத்திய சுஊத் அரசாங்கம், நியாயமான வழக்கு விசாரணைக்குரிய சர்வதேச நெறிமுறைகளுக்குப் புறம்பாக அமைந்த 13 தடவையிலான நீதிமன்ற அமர்வுகளையடுத்து, 2014 ஒக்டோபர் 15ம் திகதியன்று, கட்டாய மரண தண்டனைத் தீர்ப்பை அவருக்கு வழங்கியது. இத்தீர்ப்பு, ‘தேசிய அரசாங்கத்தை’ வலுப்படுத்துவதற்கான ஆயதுல்லாஹ் ஷேய்க் நிம்ரின் முன்மொழிவு வரைபை மரண தண்டனைக்குரிய பாரிய குற்றமாகக் கருதியிருந்தது.
இங்கே, ‘தாராளம் மற்றும் சுயகௌரவத்திற்கான மனு’வை, எவ்வித திருத்தமும், மாற்றமுமின்றி ஆயதுல்லாஹ் ஷேய்க் நிம்ர் அவர்கள், தமது கைப்பட எழுதி, பகிரங்கமாக வெளியிடுவதற்கு முன், சுஊத் குலத்து அரசுக்கு வழங்கியபடி, இவ்வரைபின் சாரம், அதிலே குறிப்பிடப்பட்ட அரசியல் கோரிக்கைகள், அரசியல் உள்ளடக்கங்கள் முதலானவை பற்றி உலகோர் அறிந்து, அதன் பின், இப்படியான வரைபு ஆதரவிற்கும், ஊக்கத்திற்கும் உரியதா? இல்லை, கொடுங்கோன்மைக்கும், மரண தண்டனைக்கும் உகந்ததா? என்பதில் தாமே தீர்ப்பளிக்கும் வகையில் இவ்வரலாற்று ஆவணத்தை மீள்வெளியீடு செய்கிறோம்.
ஆயதுல்லாஹ் ஷேய்க் நிம்ர் பாகிருல் நிம்ருடனான
ஒருமைப்பாட்டிற்கான சர்வதேச செயற்குழு
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்
தர்மத்தை (ஹக்கை) தெளிவானதும் நிலைத்ததுமாக, அதர்மத்தை (பாத்திலை) தெளிவற்றதும் நிலையற்றதுமாக படைத்துள்ள இறைவனுக்கே புகழனைத்தும். ஹக்கின்மீது நிலைத்திருந்து, உண்மையையே உரைத்த இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் மற்றும் அன்னாரது பரிசுத்த குடும்பத்தினர் ஆகியோர் மீது சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்.
கோரிக்கைகள் பற்றிய விடயத்திற்குள் நுழையும் முன், ஆரம்பத்தில் சில முன்னோட்டங்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்:
முதலாவது: நான் எவ்வித (தகிய்யா எனும்) ஒழிவுமறைவும், பகட்டுத்தனமுமின்றி நேரடியாகவும், தெளிவாகவும் பேசவுள்ளேன். ஏனெனில், ஒழிவுமறைவு என்பது, குறிப்பிட்ட தீங்கை நீக்கவும், அநீதி, அட்டூழியம் மற்றும் அடக்குமுறை முதலியவற்றினாலான அச்சத்தினாலும் தேவையாக உள்ளது. நான், இவற்றைக் கருத்திற்கொள்ளவில்லை. இதனால், குறிப்பிட்ட தீங்கை நீக்குவதற்கும், அநீதி, அட்டூழியம் மற்றும் அடக்குமுறை ஆகியவற்றினாலான அச்சத்திற்காகவும் அனுமதிக்கப்படுகின்ற (தகிய்யா எனும்) ஒழிவுமறைவுக்கு கட்டாயப்படுத்தப் பட்டவனாகவோ, நிர்ப்பந்திக்கப் பட்டவனாகவோ நானில்லை.
இரண்டாவது: பல்வேறு விடயங்களின் போது, நன்றாகக் காதுகொடுக்கும், செவிமடுக்கும் கலையானது, நன்றாக உரையாற்றும், பேசும் கலையை விடவும் முக்கியமானது. ஏனெனில், ஆளப்படுவோர், பிள்ளைகள் முதலானோரின் சிந்தனைகள் தொடர்பில் ஆட்சியாளர், தந்தை போன்றோரின் புறத்திலிருந்து அவர்களின் சத்தத்தை செவிமடுக்காததால் அல்லது அதற்கு துல்லியமாகக் காதுகொடுக்காது, கோபுரத்தின் மீதிருப்பவர் போன்று செவியுறுவதனால் ஏற்படுகின்ற புரிதலின்மையே ஆட்சியாளர் – ஆளப்படுவோர், தந்தை – மகன் மற்றும் இவர்கள் போன்றோரிடையே உள்ள தொடர்புகள் வலுவிழப்பதற்கான அடிப்படைக் காரணமாகும்.
மூன்றாவது: வெளிப்படைத் தன்மையும், உண்மை நிலையும் ஆரம்பத்தில் கசப்பானதும், சிக்கலானதும் ஆகும். ஆனால், அவை குறித்து சிந்தித்து, அவற்றின் மூலம் எதிர்காலத்தை கணித்துவிட்டால், சமூக அலுவல்களின் நிர்வாகத் தலைமை சுவையானதும், இனியதும், மிருதுவானதுமாக மாறி, எவ்வித அச்சமும், பயமுமின்றி கையில் எடுக்கக் கூடியதாகிவிடும்.
நான்காவது: தெளிவின்மைகள், சிக்கலான நிலைகள், கொந்தளிப்புகள், தவறுகள் முதலானவற்றிலிருந்து விடுபட்டு, பிரச்சினைகளின் உண்மைத் தன்மையை அறிந்துகொள்வதற்கு ஒரு சாதாரண ஆய்வே போதுமானது. தவறான, போலியான பெரும் அறிக்கைகள் – பிழையான, சந்தேகத்திற்கிடமான தரவுக் கிடங்குகள் – இழிவான, ஒருதலைப்பட்ச வெகுஜனப் பகுப்பாய்வுகள் – சந்தேகம், தவறு, பக்கசார்பு மற்றும் முன்தீர்மானம் முதலானவற்றினால் மாசுபடுத்தப்பட்ட தகவல் சுரங்கம் போன்றவற்றுடன் இவ் ஆய்வு வரையறுக்கப்படக் கூடாது என்ற நிபந்தனையில் இது அமைந்திருத்தல் வேண்டும்.
ஐந்தாவது: தூய உள்ளங்களும், மெய்யுரைக்கும் நாவுகளும் தமது உரிமையாளர்கள் எவ்வித ஒழிவுமறைவின் பாலும் தேவையற்று இருப்பதற்கும், இழிவான நாவுகளின் உரிமையாளர்கள் நயவஞ்சகம், பாசாங்கு, பொய், மோசடி மற்றும் துரோகம் முதலானவற்றிலிருந்து விடுபடுவதற்கும், எல்லா உள்ளங்களும் வெளிப்படைத் தன்மை, மெய்யுரைத்தல் மற்றும் சந்தேகமற்ற பேச்சு முதலானவற்றைத் தேடுபவையாக இருத்தல் வேண்டுமென நம்புகிறேன்.
ஆறாவது: அஹ்லுல்பைத் நேசரின் (ஷீஆ) சிந்தனையானது, புறந்தள்ளி விடுகின்ற (ராஃபிழி) சிந்தனையாகும். அதாவது இது அநியாயம், ஒடுக்குமுறை மற்றும் அட்டூழியம் முதலானவற்றை புறந்தள்ளிவிடுகிறது. அதேநேரம், ஏனைய எல்லா சமயங்கள், சமயப் பிரிவுகள், சர்வதேச அரசுகள் மற்றும் சமூகங்கள் முதலியவற்றோடு மிகச் சிறந்த ஒத்துறவாடலைக் கொண்டிருக்கிறது. ஏனெனில், அநியாயமும், அட்டூழியமும் தனது உரிமை மீறப்படும் வகையில் நிறைவுற்றாலும் கூட, இச்சிந்தனை சீர்திருத்தம், ஐக்கியம் மற்றும் கூட்டு ஒத்துணர்வு ஆகியவற்றையே வேண்டிநிற்கிறது. இச்சிந்தனை குழப்பம், வன்முறை, போர்வெறி மற்றும் பதற்றநிலை முதலியவற்றை புறந்தள்ளிவிடுகிறது. இச்சிந்தனை இமாம் அலீ இப்னு அபூதாலிப் அலைஹிஸ்ஸலாம் அவர்களால் தோற்றுவிக்கப் பட்டதாகும். இவர், போர்க்களத்தில் மாவீரனாய், தோற்கடிக்க முடியாத (ஹைதர்) சிங்கமாய் திகழ்ந்திருந்தும் கூட, அவர் இவ்வாறும் (பொறுமையுடன்)
குறிப்பிட்டிருந்தார்.
‘இறைவன் மீது ஆணையாக, எனது (ஆத்மீக) நீர்வீழ்ச்சியிலிருந்து (அறிவுக்) கடல் பெருக்கெடுத்துக் கொண்டும், எனது (ஆளுமை) உச்சத்தை (மானுட) சிந்தனைப் பறவைகள் எட்டிவிடாமலும் இருக்கும் நிலையில் நானோ அரைகருவியின் அச்சாணிபோல் (சுழன்று கொண்டு) கிலாபத்துக்காக காத்திருப்பதை அறிந்திருந்தும் கூட, இன்னார் கிலாபத் ஆடையை உடுத்தியுள்ளார். எனவே, நானும் வேறொரு ஆடையை உடுத்தி, அதிலிருந்து கண்களை மூடிக்கொண்டேன். வெறுங்கையுடன் போரிடுவதோ? அல்லது பெரியாரை சோர்வடையச் செய்து, இளைஞரை முதுமையாக்கி, ஒரு விசுவாசியை தனது இறைவனை தரிசிக்கும்வரை (உயிரைப் பறிக்கும்வரை) துன்புறுத்துகிற குருட்டிருட்டின் மீதான பொறுமையை கடைப்பிடிப்பதோ? என்று நான், எனது காரியம் குறித்து சிந்தித்தேன். இவ்விரண்டிலும் பொறுமை காத்தலே அறிவுபூர்வமானது என்பதை விளங்கிக்கொண்டேன். என்னுடைய (கிலாபத்) வாரிசுரிமை கொள்ளையடிக்கப்பட்டு, என் கண்களில் முள்ளும், என் தொண்டையில் எலும்புகளும் சிக்குண்டிருப்பதைக் கண்ணுற்ற நிலையில் பொறுமை காத்தேன்.’
நாம் சமூக, நகர அமைதியைப் பேணுவதற்காக கொடுமையைக் கூட, தாங்கிக்கொள்வதற்கு அவர் இவ்வாறு எமக்குப் போதித்திருந்தார். மேலும், அவர் ‘தன்னையேயன்றி வேறெவரும் அநீதிழைக்கப்படாது, முஸ்லிம்கள் அமைதியோடு வாழும்போதெல்லாம் பணிந்து செல்வேன்’ என்று, தம் நேசர்கள் மற்றும் ஆதரவாளர்களின் உள்ளங்களில் எதிரொலிக்கும் கூற்றை உரைத்திருந்தார்.
இம் முன்னோட்டத்தைத் தொடர்ந்து, சங்கைமிகு அல்-குர்ஆனில் வந்துள்ள உயர்வான அல்லாஹுவின் வார்த்தையைக் கொண்டு எனது பிரதான உரையை ஆரம்பிக்கின்றேன்.
يٰدَاوُدُ اِنَّا جَعَلْنٰكَ خَلِيْفَةً فِى الْاَرْضِ فَاحْكُمْ بَيْنَ النَّاسِ بِالْحَقِّ وَلَا تَتَّبِعِ الْهَوٰى فَيُضِلَّكَ عَنْ سَبِيْلِ اللّٰهِ ؕ اِنَّ الَّذِيْنَ يَضِلُّوْنَ عَنْ سَبِيْلِ اللّٰهِ لَهُمْ عَذَابٌ شَدِيْدٌۢ بِمَا نَسُوْا يَوْمَ الْحِسَابِ
‘தாவூதே…! நாம் உம்மை பூமியில் (எமது) பிரதிநிதியாக ஆக்கியுள்ளோம். எனவே, மக்கள் மத்தியில் உண்மையைக் கொண்டு தீர்ப்பளிப்பீராக. அல்லாஹுவின் பாதையிலிருந்து உன்மை திருப்பிவிடும் மனோ இச்சையைப் பின்பற்றாதீர். இறைவனுடைய பாதையிலிருந்து விலகிச்செல்வோர், விசாரணை நாளை மறந்துவிட்டதன் காரணமாக, கடுமையான வேதனையை அனுபவிப்பார்கள்’
(அஸ்-ஸாத், 26)
நாட்டின் அல்லது மக்களின் அமைதியை அச்சுறுத்துகின்ற, அல்லது அரசாங்கத்தின் தூண்களை பலவீனப்படுத்தி, தற்காலிகமாக மாற்றிவிடுகின்ற அல்லது அதன் துறைகளை வலுவிழக்கச் செய்கின்ற எந்தவொரு விடயத்தையும் நாம் வேண்டி இருந்ததுமில்லை. அவ்வாறு இருக்கப் போவதுமில்லை. நாங்கள் வேண்டுகின்ற அனைத்தும் பாதுகாப்பையும், ஸ்திரத்தன்மையையும் நிலைபெறச் செய்பவையே. அவை அரசாங்கத்தின் தூண்களை வலுப்படுத்தி, நீடிக்கச் செய்பவையே, அதன் துறைகளை உறுப்படுத்துபவையே. ஏனெனில், இறைவன் தன் அடியாரைக் கருத்திற்கொண்டு, அவற்றை மக்கள் மத்தியில் நடைமுறைப்படுத்துமாறு ஆட்சியாளர்களாக இருந்த தனது தூதர்களுக்கு கட்டளையிட்டிருந்த உரிமையையே அன்றி, வேறெதனையும் நாம் வேண்டவில்லை. ‘ஆதமுடைய சந்ததியினருக்கு கண்ணியத்தை, சங்கையை அருளினோம்’ எனக் குறிப்பிட்டு, ஆதமுடைய சந்ததியினருக்கு அல்லாஹு தஆலா வழங்கியுள்ள கண்ணியமான வாழ்வை நிலைபெறச் செய்யும் உரிமையே இது. இக்கண்ணியமானது எந்தளவு சக்தியோடும், எவ்வித அதிகாரத்தைக் கொண்டும் எந்தவொரு மனிதனாலும் இழக்கச் செய்யவோ, மிதித்து அலட்சியப் படுத்தவோ முடியாத, அதேநேரம் தன்னால் கூட புறக்கணிப்பதற்கு அனுமதிக்கப்படாத மானுட கண்ணியமாக இருக்கிறது. ஏனெனில் இக்கண்ணியமானது, அதனைக் கொண்ட ஒருவனால், அதைப் பாதுகாத்து, அதன் அடித்தளங்களை உறுதி செய்வதையன்றி, வேறெவரும் அதைக் கைப்பற்றுவதற்கு அனுமதிக்கப்படாத மனித உரிமைகளுள் அடங்குகின்றது. இது மற்றவர்களால் கைப்பற்றுவதற்கு அனுமதிக்கப்படாத வாழ்வுரிமையை விடவும் உயர்வான உரிமையாகும். இது (இவ்வுலக) ஆயுளையும், இருப்பையும் மனிதன் கொண்டிருப்பதற்கான அங்கீகாரமும், எதுவின்றி வாழ்வுரிமை பெறுமதியற்றதாக இருக்கிறதோ அத்தகு கண்ணியமுமாக இருக்கிறது.
அறிவுள்ள, சங்கைமிகுந்த எல்லா மனிதர்களின் அபிலாiஷயான இக்கண்ணியத்துடைய ஏணிப்படிகளைக் காண்பதற்கான பிரகாசத்தின் வாயிலானது, இறையச்சத்தின் மூலம் சாத்தியமாகிறது. கண்ணியத்தின் மிக உயர்ந்த நிலைகளுக்கு மனிதனை சென்றடையச் செய்துவிடுவது இவ் இறையச்சமேயாகும்.
اِنَّ اَكْرَمَكُمْ عِنْدَ اللّٰهِ اَ تْقٰٮكُمْ
‘நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகவும் கண்ணியமானவர், உங்களில் மிக இறையச்சம் உடையவர் ஆவார்’
(ஹுஜுராத், 13).
இவ்வகையில், இறையச்சமானது (தக்வா), விசேட நற்பண்பாக உள்ளதோடு, அதன் இயல்பூக்கத் தன்மையின் அடிப்படையில்தான் எல்லா நபிமார்களும், அவர்களின் பிரதிநிதிகளும் படைக்கப்பட்டனர். அவர்களும், அதனைக் கடைப்பிடிக்குமாறு தம் ஆதரவாளர்களுக்கு உபதேசித்தனர். ஏனெனில், இறையச்சம் என்பது, ஆட்சியின் ஆரோக்கியத்தையும், ஸ்திரத்தன்மையையும் பாதுகாத்து, அதன் சரிவை தடுத்துவிடுகின்ற உறுதியான அடித்தளமாகும்.
اَفَمَنْ اَسَّسَ بُنْيَانَه عَلٰى تَقْوٰى مِنَ اللّٰهِ وَرِضْوَانٍ خَيْرٌ اَمْ مَّنْ اَسَّسَ بُنْيَانَه عَلٰى شَفَا جُرُفٍ هَارٍ فَانْهَارَ بِه فِىْ نَارِ جَهَـنَّمَ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ
‘யார் மேலானவர்? பயபக்தியுடன் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஒரு கட்டடத்தின் அடிப்படையை அமைத்தவரா? அல்லது (தானே சரிந்துவிடக்கூடிய) பூமியை ஒட்டி அடிப்படையிட்டு (அந்த அடிப்படையில்) கட்டடத்தை – அதுவும் சரிந்து பொடிப்பொடியாக நொறுங்கி அவருடன் நரக நெருப்பில் விழுந்து விடும் (கட்டடத்தை அமைத்தவரா?) அல்லாஹ் அநியாயக்கார மக்களை நேர் வழியில் செலுத்த மாட்டான்.’
(தௌபா, 109)
ஆரோக்கியத்திற்கும், ஸ்திரத்திற்கும் அடிக்கோடிட்டு, சரிவைத் தடுக்கக் கூடியதான இறையச்சத்தின் வர்ணத்தையும், நறுமணத்தையும் அரசு பெற்றிருப்பதற்கு, எல்லா அமைச்சுகளிலும், அரசதாபனங்களிலும் காணப்படுகின்ற எல்லா சிறிய, பெரிய கூறுகளும் – சட்டவிதிகளும், இறையச்சத்தை அடைந்து கொள்வதற்கான மிகச்சிறிய வழியாக அமைந்திருக்கின்ற நீதி எனும் பெறுமானத்தைக் கொண்டு அலங்கரிப்படுதல் வேண்டும்.
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُوْنُوْا قَوَّامِيْنَ بِالْقِسْطِ شُهَدَآءَ لِلّٰهِ وَلَوْ عَلٰٓى اَنْفُسِكُمْ اَوِ الْوَالِدَيْنِ وَالْاَقْرَبِيْنَ اِنْ يَّكُنْ غَنِيًّا اَوْ فَقِيْرًا فَاللّٰهُ اَوْلٰى بِهِمَا فَلَا تَتَّبِعُوا الْهَوٰٓى اَنْ تَعْدِلُوْا ۚ وَاِنْ تَلْوۤا اَوْ تُعْرِضُوْا فَاِنَّ اللّٰهَ كَانَ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرًا
‘முஃமின்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள்; (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர் செல்வந்தராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்) ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன். எனவே, நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள்; மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்.’
(அந்நிஸா, 135)
மக்களின் மீதான நீதியான ஆட்சி என்பது, அல்லாஹ் தனது தூதர் ஹஸரத் தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வழங்கிய கட்டளையாகும்.
يٰدَاوُدُ اِنَّا جَعَلْنٰكَ خَلِيْفَةً فِى الْاَرْضِ فَاحْكُمْ بَيْنَ النَّاسِ بِالْحَقِّ
‘தாவூதே! நிச்சயமாக நாம் உம்மை பூமியில் பிரதிநிதியாக ஆக்கினோம்;, ஆகவே மனிதர்களிடையே சத்தியத்தை (நீதத்தை)க் கொண்டு தீர்ப்பு (ஆட்சி) செய்வீராக’
(அஸ்-ஸாத், 26)
இதே நீதிக்கட்டளை, இறைத்தூதர்களின் தலைவரும், இறைவனின் மிகச் சிறந்த அடியானுமாகிய ஹஸரத் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களுக்கும் இடப்பட்டுள்ளது.
فَلِذٰلِكَ فَادْعُ ۚ وَاسْتَقِمْ كَمَاۤ اُمِرْتَۚ وَلَا تَتَّبِعْ اَهْوَآءَهُمْۚ وَقُلْ اٰمَنْتُ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ مِنْ كِتٰبٍۚ وَاُمِرْتُ لِاَعْدِلَ بَيْنَكُمُ
‘எனவே, (நபியே! நேர்வழியின் பக்கம் அவர்களை) நீர் அழைப்பீராக. மேலும், நீர் ஏவப்பட்ட பிரகாரம் உறுதியுடன் நிற்பீராக. அவர்களுடைய மனோ இச்சைகளை நீர் பின்பற்றாதீர்;. இன்னும், ‘அல்லாஹ் இறக்கி வைத்த வேதங்களை நான் நம்புகிறேன்;. மேலும், உங்களிடையே நீதி வழங்கும்படியும் நான் ஏவப்பட்டுள்ளேன்…’ என்று கூறுவீராக.’
(அஷ்ஷுறா, 15)
இக்கட்டளை, ஆட்சியில் அமரக்கூடிய அனைவருக்குமான இறைக்கட்டளையாக உள்ளது.
اِنَّ اللّٰهَ يَاْمُرُكُمْ اَنْ تُؤَدُّوا الْاَمٰنٰتِ اِلٰٓى اَهْلِهَا ۙ وَاِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ اَنْ تَحْكُمُوْا بِالْعَدْلِ اِنَّ اللّٰهَ نِعِمَّا يَعِظُكُمْ بِه اِنَّ اللّٰهَ كَانَ سَمِيْعًۢا بَصِيْرًا
‘அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்படைத்து விடவேண்டுமென்றும், மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்புக் கூறுதல் வேண்டும் என்றும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான். நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு (இதில்) மிகவும் சிறந்த உபதேசம் செய்கிறான், நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.’
(அந்நிஸா, 58)
நீதி பரிபூரணமாவதற்கு, மக்கள் மத்தியில் நீதியை நிலைநாட்டுவதையே அன்றி, வேறுவழியில்லை.
وَاِنْ حَكَمْتَ فَاحْكُمْ بَيْنَهُمْ بِالْقِسْطِ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُقْسِطِيْنَ
‘நீர் (இவர்களிடையே) தீர்ப்பளிப்பீராயின் நியாயமாகவே அவர்களிடையில் தீர்ப்பளிப்பீராக. ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் நீதிமான்களையே நேசிக்கின்றான்.’
(அல்மாயிதா, 42)
அல்லாஹு தஆலா, நீதி நிலைபெறுவதற்காக வேண்டி தனது தூதர்களை தெளிவான ஆதாரங்களோடும், பிரகாசிக்கும் அளவுருக்களோடும் அனுப்பியுள்ளான். அவற்றின் மூலம், மக்கள் நீதியை நிலைநாட்டி, எவருக்கும் அநீதியிழைக்காமல் இருப்பதற்காக, அநீதியிலிருந்து தங்களை தடுக்கக்கூடிய நீதித்துறைசார்ந்த சட்டங்களைக் கொண்ட விரிவான கட்டளைகளையும், நீதி மற்றும் சமத்துவத்திற்கான அளவீடுகளையும் உள்ளடக்கியதாக திருக்குர்ஆனை இறக்கியருளினான். மக்களின் உரிமைகளை மீறுவோரைத் தண்டிக்கக் கூடிய வலுவான தடுப்புச் சக்தியை அவன் அனுப்பியுள்ளான். இத்தண்டனைகள், சிலநேரங்களில் மிகத்தீவிர நிலைகளில் யுத்தமாகவும், உயிர்பலியாகவும் இருந்தன. இவைகள் அனைத்தும், மனிதர்களின் இச்சையை அல்லது குரோதத்தை தணிப்பதற்காக மட்டுமன்றி அவர்களின் வாழ்வு, கண்ணியம் மற்றும் பாதுகாப்பு என்பவற்றை காக்கவும், அவர்களது அனைத்து உரிமைகளையும் பேணி, ஒருவருக்கு ஒருவர் அநீதியிழைப்பதிலிருந்து அவர்களைத் தடுக்கவுமாகவும் அமைந்திருந்தன.
لَـقَدْ اَرْسَلْنَا رُسُلَنَا بِالْبَيِّنٰتِ وَاَنْزَلْنَا مَعَهُمُ الْكِتٰبَ وَالْمِيْزَانَ لِيَقُوْمَ النَّاسُ بِالْقِسْطِۚ وَاَنْزَلْنَا الْحَـدِيْدَ فِيْهِ بَاْسٌ شَدِيْدٌ وَّمَنَافِعُ لِلنَّاسِ وَلِيَـعْلَمَ اللّٰهُ مَنْ يَّنْصُرُه وَ رُسُلَه بِالْغَيْبِ اِنَّ اللّٰهَ قَوِىٌّ عَزِيْزٌ
‘நிச்சயமாக நம் தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளுடன் அனுப்பினோம். அன்றியும், மனிதர்கள் நீதியுடன் நிலைப்பதற்காக, அவர்களுடன் வேதத்தையும் (நீதத்தின்) தராசையும் இறக்கினோம். இன்னும், தனக்கும், தன்னுடைய தூதருக்கும் மறைமுகமாக உதவி செய்பவர் எவர் என்பதை (சோதித்து) அறிந்து கொள்வதற்காகவும், மனிதர்களுக்கு கடும் அபாயமும், பலபயன்களும் இருக்கின்ற இரும்பையும் அருளினோம். நிச்சயமாக அல்லாஹ் பலம் மிக்கவன், (யாவற்றையும்) மிகைத்தவன்.’
(அல்-ஹதீத், 25)
எனவே ஒரு ஆட்சியாளர், தான் கொண்டிருக்க வேண்டிய மிக முக்கிய இரு பொறுப்புகளாவன நீதியான அரசை நிலைநிறுத்துவதும், சமத்துவமான ஆட்சியை நடாத்துவதுமாகும். ஏனெனில் நீதி (அத்ல்) என்பது, ஆட்சியாளரின் புறத்தேயுள்ள அநீதத்தை ஒழிப்பதும், நேர்மை (கிஸ்த்) என்பது மக்கள் ஒருவருக்கு ஒருவர் அநீதியிழைப்பதைத் தடுப்பதுமாகும். நீதியான, நேர்மையான அரசை நடாத்துவதன் ஊடாக மனிதன் தனது அனைத்து உரிமைகளையும் அடைந்துகொள்கிறான். இதனால், தனிமனித வாழ்விலும், அரசியல், பொருளாதாரம், சமூகம், சிந்தனை மற்றும் இவையல்லாத துறைகளிலும் கண்ணியமான வாழ்வை அவனால் வாழமுடியும்.
இவ்வகையில் ஒரு ஆட்சியாளரின் இரு முக்கிய கடமைகளாக, யாருக்கும் அநீதமிழைக்காத நீதியான ஆட்சியை நடாத்துவதும், தனது ஆட்சிக்குட்பட் எவரும் மற்றவருக்கு அநீதமிழைத்திடாத வகையில் நேர்மையான ஆட்சியைப் பேணுவதுமாகும். ஒரு ஆட்சியாளர் நீதியை நிலைநாட்டுவதும், அதேபோன்று ஆட்சியாளரும், மக்களும் நேர்மையைப் பேணுவதும் அரசாங்கத்திற்கு வலுவூட்டி, அதனை திடப்படுத்தி, நீடிக்கச் செய்யக்கூடிய இரு அடிப்படைத் தூண்களாக உள்ளன. சமூகம் வேண்டிநிற்கின்ற, நிகழவேண்டும் என்று அபிலாiஷ கொண்டுள்ள கோரிக்கைகளின் சுருக்கம் பின்வருமாறு அமைந்துள்ளன.
சமூக திருப்தியைப் பெற்ற அரசியல் முறைமையானது கட்டுமாணப் பணிகள், அறிவுசார் இயக்கப்பாடுகள், உறுதியான பாதுகாப்பு முதலியவற்றை இயல்பெறச் செய்கின்றன. நீதி மற்றும் நேர்மை ஆகியவற்றின் அடிப்படையிலான ஆட்சியை நிறுவுவதற்கு ஆட்சியாளர்கள் முனைந்தால், அநீதியும், அட்டூழியமும் அடியோடு ஒழிந்துவிடும். அநீதியும், அட்டூழியமும் ஒழிந்துவிட்டால் அரசியல் முறைமை எனும் கப்பல் கடுமையான கலகங்கள், அதிர்வுகள் முதலியற்றைக் கொண்ட கடல் அலைகளின் கொந்தளிப்பிலிருந்து பாதுகாப்பாக கரைசேரும். இதனால், மனிதவாழ்வின் எல்லாத் துறைகள் மற்றும் புலங்கள் மீது பாதுகாப்பு எனும் நிழல் விழும். பாதுகாப்பு நிழல் நிழுந்தால், பொருளாதாரம் விருத்தியடைந்து செல்வங்கள் இரு மடங்காகி, எல்லா மனிதர்களும் தேவையற்றோராக மாறிவிடுவர். ஒவ்வொரு மனிதனும், எவ்வித குறையுமின்றி, தனது உரிமையை அடைந்து கொள்வான். ‘இமாம் மஹ்தி கிளர்ந்தெழும்போது, நீதியாட்சி புரிவார். அவருடைய காலத்தில் அநீதி அடியோடு ஒழிந்துவிடும். பாதைகள் பாதுகாப்பைப் பெறும். பூமி தனது அருட்கொடைகளை வெளியில் கொட்டும். எல்லா உடமைகளும், அதன் உரித்துடையாருக்கே மீண்டுவிடும்’
மேலே வழங்கப்பட்ட இம் முன்னுரையின் மூலம், எமது கோரிக்கைகள் தெளிவாகிவிடுகின்றன. இக்கோரிக்கைகளின் சுருக்கம் இதோ:
• கோட்பாட்டைத் தெரிவு செய்வதிலும், அதனைச் செயற்படுத்துவதிலும், சிந்தனைகளைப் பின்பற்றுவதிலும், அவற்றை அணுகுவதிலும் நீதி, நேர்மை மற்றும் சுதந்திரம் (சிந்தனைச் சுதந்திரமும், நீதியும்) வேண்டும்.
• அரச திணைக்களங்கள், அரசதாபனங்கள் அனைத்திலும், அதன் உயர்பதவிகளில் கூட தொழிற்துறையைத் தேர்வு செய்வதிலும், தொழில்சார் முன்னேற்றத்திலும் நீதி, நேர்மை மற்றும் சுதந்திரம் (தொழிற் சுதந்திரமும், நீதியும்) வேண்டும்.
• இறைவன், இத்தேசத்திற்கு அருளியுள்ள செல்வத்தை பயன்படுத்துவதிலும், அனுபவிப்பதிலும் நீதி, நேர்மை மற்றும் சுதந்திரம் (பொருளாதார சுதந்திரமும், நீதியும்) வேண்டும்.
• அரசியல்சார்ந்த மனோபாவங்கள், கருத்துக்கள், பதவிகள் மற்றும் அரசியல் பங்கேற்புகள் முதலானவற்றில் நீதி, நேர்மை மற்றும் சுதந்திரம் (அரசியல் சுதந்திரமும், நீதியும்) வேண்டும்.
• தனிப்பட்ட, சமூக விவகாரங்களில் நீதி, நேர்மை மற்றும் சுதந்திரம் (சமூக சுதந்திரமும், நீதியும்) வேண்டும்.
• நீதித்துறை மற்றும் தண்டனைச் சட்டங்களில் நீதியும், நேர்மையும் (குற்றவியல் நீதி) வேண்டும்.
நடந்தேறவேண்டும் என்று சமூகம் அபிலாiஷ கொள்கின்ற இக்கோரிக்கைகளில் சிலதை தெளிவாக விளங்கிக் கொள்ளவும், பொதுமைக்கூற்று எனும் கடலில் மூழ்கி தெளிவற்று விடாது இருக்கவும் தெளிவாகவும், பொருள்மயக்கம் அற்றும் விரிவாகக் குறிப்பிடுகிறேன்.
1. ஷீஆயிஸத்தை சட்டபூர்வமாக அங்கீகரித்து, அதனை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளல் வேண்டும். அனைத்து அரச திணைக்களங்களிலும், அரசதாபனங்களிலும் அதனை ஏற்றுக்கொள்ளும் வகையில், நடைமுறை ரீதியில் நேர்மையையும், நன்மதிப்பையும் பேணல் வேண்டும்.
2. முஸ்லிமோ, முஸ்லிம் அல்லாதவரோ யாராகினும் ஒவ்வொரு மனிதனும் தான் விரும்புகின்ற மத்ஹப்பை பின்பற்றுவதற்கு உரிமையைக் கொண்டுள்ளார். எனவே, ஷீஆ மத்ஹப்பை, தனது மத்ஹப்பாகக் கொண்டிருப்பதற்கும், அதன் அடிப்படையான மற்றும் உபரியானவற்றை நம்புவதற்கும், அவற்றின்படி வழிபாடுகளை மேற்கொள்வதற்கும் ஒவ்வொருவரும் உரிமையுடையவராக இருக்கிறார். ஒருவர் அதனை மீறிச் செயற்படவும், அதைக் கைவிடவும் நிர்ப்பந்திப்பதற்கோ அல்லது அந்நோக்கத்தில் அவரை அச்சுறுத்துவதற்கோ அல்லது தனது சமயக் கடமைகளை விட்டுவிடுமாறு அவரைத் துன்புறுத்துவதற்கோ யாருக்கும் உரிமை கிடையாது.
3. ஷீஆ மத்ஹப் மற்றும் அதன் ஆதரவாளர்களின் உரிமைகளை மீறுகின்ற அல்லது புறந்தள்ளி விடுகின்ற சட்டங்கள், விதிகள், உத்திகள் மற்றும் வழிமுறைகள் அனைத்தையும் ரத்து செய்தல் வேண்டும்.
4. பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் முதலியவற்றிலுள்ள சமயப் பாடங்கள் அனைத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தி, அவற்றை பின்வரும் விருப்பத்தேர்வுகளுக்கு அமைவாக மாற்றீடு செய்தல் வேண்டும்:
(அ) மத்ஹபுகள் கூட்டாக இருக்கின்ற இடங்களுக்கு மட்டும் வரையறுக்கப்பட்ட சமயப் பாட அலகுகளில், அவைகளுக்கு இடையில் முரண்படுகின்ற விடயங்கள் குறித்து எவ்வித குறிப்பும் இடம்பெறாத விதத்தில் அவற்றின் உள்ளடக்கத் தலைப்புகள் நெறிப்படுத்தப்படல் வேண்டும். இது துண்டித்துவிடுவதை நோக்காகக் கொண்ட, அதிகாரம் மற்றும் ஆயுதம் முதலியவற்றினால் புறந்தள்ளி விடுகின்ற, ஆதாரத்திற்கு ஆதாரம், நிரூபணத்திற்கு நிரூபணம் கொண்டுவர முடியாத நபர்களைத் தவிர, ஏனைய எல்லோரையும் திருப்தியடையச் செய்கின்ற, மிகச் சிறந்த விருப்பத்தேர்வாகும்.
(ஆ) பருவ வயதை அடைந்த ஒரு மாணவர் தானாகவோ, அல்லது பருவ வயதை அடையாத மாணவருக்கு, அவரது பொறுப்புதாரியோ தான் விரும்புகின்ற பாட உள்ளடக்கங்களை தெரிவு செய்யும் வகையில் ஒவ்வொரு மத்ஹபினருக்கும் தனித்தனியான பாட உள்ளடக்கங்களை நெறிப்படுத்தல் வேண்டும்.
(இ) குறிப்பிட்ட பிராந்தியத்தில் மக்கள் பெரும்பான்மையின் அடிப்படையில் பாட உள்ளடக்கங்கள் தெரிவு செய்யப்படல் வேண்டும். அதாவது, சவூதியின் கதீஃப் மற்றும் அதற்கு ஒப்பான மாவட்டங்களில் ஷீஆ முஸ்லிம்களின் பாடநூட்கள் போதிக்கப்படல் வேண்டும்.
(ஈ) ஒரு கல்லூரியில் கற்கின்ற மாணவர்களின் பெரும்பான்மையின் அடிப்படையில் பாட உள்ளடக்கங்கள் தெரிவு செய்யப்படல் வேண்டும். அதாவது, சவூதியின் கதீஃப் மற்றும் அது போன்ற பிராந்தியங்களில் உள்ள அனேக கல்லூரிகளில் ஷPஆ பாட நூட்கள் போதிக்கப்படல் வேண்டும்.
5. மதீனா முனவ்வராவின் ஜன்னதுல் பகீஃயில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள இமாம்களுக்கு ஈரான் மற்றும் ஈராக்கில் நல்லடக்கம் செய்யப்பட்ட இமாம்களின் அடக்கத்தலங்கள், சியாரத்தலங்கள் போன்று, அவர்களின் உயரிய அந்தஸ்துக்குப் பொருந்தும் வகையில் சன்னதி (ழரீஹ்)களை அமைத்தல் வேண்டும். ஒரு தனிச்சிந்தனைப்போக்கைக் கொண்டிருந்தோரில் சிறுகுழு ஒன்றின் அழுத்தங்களுக்குக் கட்டுப்பட்டு, இமாம்களின் புனித அடக்கத்தலங்களை உடைத்தெறிய அனுமதியளித்து, ஷீஆக்களுக்கு மட்டுமன்றி, அஹ்லுல்பைத் அலைஹிமுஸ்ஸலாம் அவர்களை நேசிக்கின்ற அனைவரின் உள்ளங்களிலும் ஆழமான காயத்தை ஏற்படுத்திய முன்னைய அரசு, தனது முந்திய தவறுகள் மற்றும் குறைகள் அனைத்தையும் மீள்நிவர்த்தி செய்யும் வகையில் அவற்றை மீளவும் கட்டுவதற்கான அனைத்து செலவுகளையும் பொறுப்பேற்றல் வேண்டும். இக்காயம், நாட்கள், வருடங்கள் மற்றும் நூற்றாண்டுகள் கடந்தும் கூட, கடந்த காலங்களைவிடவும் இச்சியாரத் தலங்களை மிகச்சிறப்பாக அமைப்பதன் மூலமே அன்றி, ஆறமாட்டாது. ஏனைய இஸ்லாமிய மத்ஹபுகள் தாம் கொண்டிருக்கின்ற சிந்தனை, நடத்தை மற்றும் அணுகுமுறையோடு பெரும் முரண்பாட்டைக் கொண்டிருக்கின்ற அச்சிறுகுழு, தனது மத்ஹபுடைய சிந்தனைகளின் பிரதிநிதியாகக் கூட இல்லை. இச்சிறுகுழுவுடன் இஸ்லாமிய மத்ஹபுகள் முரண்பாட்டைக் கொண்டிருப்பதற்கான மிகப்பெரிய ஆதாரமாக, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களுடைய அடக்கத்தலத்தை சேதப்படுத்துவதை விட்டும் அவை, அவர்களைத் தடுத்து வைத்திருப்பதைக் குறிப்பிடலாம்.
6. ஈராக், ஈரான், சிரியா, லெபனான் மற்றும் ஏனைய இஸ்லாமிய நாடுகளில் பரவலாகக் காணப்படுவதைப் போல் இந்நாட்டிலும் திருக்குர்ஆன், திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களின் மற்றும் அன்னாரின் பரிசுத்த அஹ்லுல்பைத் அலைஹிமுஸ்ஸலாம் அவர்களின் ரிவாயத்துகள் முதலியவற்றைக் கொண்டமைந்த இஸ்லாமிய அறிவுகளைப் போதிக்கின்ற ஆன்மீக கலாபீடங்கள், கல்விவளாகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை அமைப்பதற்கான அனுமதியை வழங்கல் வேண்டும்.
7. ஷீஆ முஸ்லிம்களின் நீதித்துறை விவகாரங்கள் ஒவ்வொன்றிலும் ஜஃபரி மத்ஹப் நீதிமன்றங்களை தடுப்பதிலிருந்தும், அவை சவூதி ஷரீஆ உயர் நீதிமன்றங்களில் தங்கியிருப்பதிலிருந்தும் இந்நீதிமன்றங்கள் முழுமையான சுயாதீனத்தைப் பெறுதல் வேண்டும். அத்தோடு, ஷீஆ முஸ்லிம்களது சட்டவிவகாரங்கள் மற்றும் சட்டக்கோரிக்கைகளை விசாரணை செய்து, அவர்களுக்கு மத்தியில் நியாயம் கண்டு, தீர்ப்பளிப்பதற்கான நீதிபதிப் பதவியைக் கருத்திற்கொண்டு, தேவைப்பாடுகளின் அளவிற்கேற்ப அவர்களது நீதிமன்றங்களில் அவர்களுடைய நீதிபதிகளுக்கான அதிகார வரம்பை விரிவாக்கம் செய்தல் வேண்டும்.
8. ஷீஆ அறிஞர்களுள் ஷீஆ முஸ்லிம்களின் விவகாரங்கள், பிரச்சினைகள் அனைத்தையும் நெறிப்படுத்தி, வழிநடாத்தி, முன்னெடுக்கக் கூடிய, மேலும் சமய ரீதியிலான தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு முயற்சிக்கக் கூடிய அளவிற்கு கடமையுணர்ச்சியுள்ள, இஜ்திஹாத் தரத்தைப் பெற்ற நபர்களை மட்டும் உள்ளடக்கி, ‘அஹ்லுல்பைத் அறிஞர் பேரவை’ எனும் பெயரில் ஷீஆ அறிஞர்களின் பேரவையை உருவாக்குவதற்கு அனுமதியளித்தல் வேண்டும். இப்பேரவை, சுயாதீனமானதாகவும், உள்நாட்டு – வெளிநாட்டு தலையீடுகளிலிருந்து விடுபட்டதாகவும் இருத்தல் வேண்டும்.
9. மஸ்ஜிதுகள், கலாசார மையங்கள், சமயத் தலங்கள் மற்றும் நிறுவனங்களை நிர்மாணிப்பதைத் தடுத்து நிறுத்துகின்ற, தள்ளிப்போடுகின்ற அல்லது சிரமத்தை ஏற்படுத்துகின்ற அனைத்து சிக்கல்களையும், பிரச்சினைகளையும் நீக்கி, அவற்றை நிர்மாணிப்பதற்கான அனுமதியை வழங்கல் வேண்டும்.
10. சமய சடங்குகள் அனைத்தையும் நடாத்தும் வகையில் மக்களை சுதந்திரமாக விடுதல் வேண்டும்.
11. அனைத்துவகை அரச ஊடகங்களிலும் சமய விடயங்களை விளக்குவதற்காக ஷீஆ முஸ்லிம்களின் தகைமைகள் மற்றும் சனத்தொகை முதலியவற்றைக் கருத்திற்கொண்டு, நியாயமான சந்தர்ப்பத்தை அவர்களுக்கு வழங்குதல் வேண்டும்.
12. மஸ்ஜிதுல் ஹராம் மற்றும் மஸ்ஜிதுந்நபி(ஸல்) ஆகியவற்றில் ஜமாஅத் தொழுகைகளுக்காக இமாமத் செய்வதில் ஷீஆ முஸ்லிம்களின் தகைமைகள், சனத்தொகை ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, அவர்களுக்கு நியாயமான பங்கைக் கொடுத்தல் வேண்டும்.
13. வெளிநாடுகளிலிருந்து ஷீஆ இஸ்லாமிய நூட்களை இறக்குமதி செய்வதற்கும், உள்நாட்டில் அவற்றை அச்சிடுவதற்குமான திறந்த வெளியை உருவாக்குதல் வேண்டும்.
14. முஸ்லிம்களின் உலக ஒன்றியம் மற்றும் இவை போன்ற அரசின் கீழுள்ள அமைப்புகளில் ஷீஆ முஸ்லிம்களின் தகைமைகள் மற்றும் சனத்தொகை முதலானவற்றைக் கருத்திற்கொண்டு, நியாயமான பங்கை அவர்களுக்கு வழங்கல் வேண்டும்.
15. அரச திணைக்களங்கள், ஆலோசனை சபை ஆகியவற்றில் அங்கத்துவம் பெறல், அமைச்சு போன்ற அரச உயர்பதவிகளுக்கு தரம் உயர்த்தல் முதலியவற்றில் ஷீஆ முஸ்லிம்களின் தகைமைகள் மற்றும் சனத்தொகையைக் கருத்திற்கொண்டு, நியாயமான பங்கை அவர்களுக்கு வழங்கல் வேண்டும்.
16. பெண்களின் கல்வி முகாமைத்துவம் மற்றும் கல்லூரிகளின் முகாமைத்துவம் முதல் அத்துறையின் உயர்பதவிகள் வரையிலான எல்லாவற்றிலும் ஷீஆ முஸ்லிம்களின் தகைமைகள் மற்றும் சனத்தொகை முதலியவற்றைக் கருத்திற்கொண்டு, நியாயமான பங்கை அவர்களுக்கு வழங்கல் வேண்டும்.
17. சவூதி அரசுடன் தொடர்புடைய ARAMCO கம்பெனி மற்றும் இதுபோன்றவற்றின் உயர் பதவிகளுக்கு தரம் உயர்த்தல், நிர்வகித்தல் ஆகியவற்றில் ஷீஆ முஸ்லிம்களின் தகைமைகள் மற்றும் சனத்தொகை அடிப்படையில் நியாயமான பங்கை அவர்களுக்கு வழங்கல் வேண்டும்.
18. அரச திணைக்களங்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் முதலிய அனைத்திலும் வேலைவாய்ப்புகள் மற்றும் நிர்வகித்தல் என்பவற்றில் ஷீஆ முஸ்லிம்களுக்கு அவர்களின் தகைமைகள் மற்றும் சனத்தொகையின் அடிப்படையில், அவர்களுக்கு நியாயமான பங்கை வழங்கல் வேண்டும்.
19. உயர்நிலைப் பள்ளியைப் பூர்த்தி செய்த அனைத்து ஆண், பெண் மாணவர்கள், அதேபோன்று பள்ளிப்பருவ வயதைக் கடந்த அல்லது பட்டதாரியாகுவதற்குக் காலங்கடந்த நபர்களைக் கூட உள்வாங்கிக்கொள்ளும் வகையில், மக்கள் தேவைகளையும், தொழிற்சந்தைகளையும் கருத்திற்கொண்டு அவசியமான விஷேட கல்வித்துறைகளை உள்ளடக்கிய பல்கலைக்கழக நகரத்தை கதீஃப் மாவட்டத்தில் நிறுவுதல் வேண்டும்.
20. சவூதி அரசினால் மேற்கொள்ளப்பட்ட 1979ம் ஆண்டு கைது நடவடிக்கைகளினால், தம்தொழிலை இழந்த அரச ஊழியர்கள், பணியாளர்கள் அனைவரையும் மீண்டும் தொழிலுக்கு அமர்த்தி, அவர்களுடைய ஊதியம் அனைத்தையும் அவர்களுக்கு வழங்கி, அவர்களின் எதிர்காலத் தேவைப்பாடுகளை மேம்படுத்தும் பொருட்டு, கடந்த காலங்களில் அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளினால் உண்டான ஆத்மீக, இலௌஹீக சேதங்களை மீள்நிவர்த்தி செய்து, கண்ணியமான வாழ்வை அனுபவிப்பதற்கு சக்தியுடைவர்களாக அவர்களை ஆக்குதல் வேண்டும்.
21. சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு, மீண்டும் ஒன்றிணைந்து, தமது கண்ணியமான இயல்பு வாழ்க்கையைத் தொடர்வதற்கான நாளை தாமும், தம்பிள்ளைகளும், தம்மனைவியரும், தம்பெற்றோர்களும், தமது குடும்ப உறுப்பினர்களும் மற்றும் தம் சமூகமும் என அனைவரும் காத்திருக்கின்ற, எல்லா அரசியல் கைதிகளும், குறிப்பாக சிறைச்சாலைகளின் கருங்குழிகளில் பலவருடங்களைக் கழித்துவருவோர் விடுவிக்கப்படல் வேண்டும்.
22. போலித்தனமான வேலையின்மைப் பிரச்சினைக்குத் தீர்வைக் கண்டு, திருமணம், ஆரோக்கியமான குடும்ப உருவாக்கம், வீடமைப்பு விவகாரம் முதல் பொருள் வளம், செழிப்பு வரையிலான கண்ணியமிகுந்த வாழ்க்கைக்கான சாத்தியப்பாட்டை வழங்கக் கூடிய, போதுமான சம்பளத்தோடு, உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் முதலானவற்றைப் பூர்த்தி செய்த அனைவரையும் பணிக்கமர்த்தி, மிகச்சிரமமான முறைகளிலும் கூட மார்க்கம் அனுமதித்துள்ளதை நாளாந்தம் உழைக்கும் நபர்களிடமிருந்து தொழில் தருநர்கள் சுரண்டுவதைத் தடுக்கும் நோக்கில் வேலை நேரங்களின் குறைந்தளவு மற்றும் கல்வி, நிபுணத்துவம், செயலாற்றல் என அனைத்து படிநிலைகளுக்குமான ஊதியம் ஆகியவை நிர்ணயிக்கப்படல் வேண்டும்.
23. பிரச்சினைகள் மற்றும் நிகழ்வுகள் ஆகியவை தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு, அவைகள் தொடர்பில் எப்போதும் பாதுகாப்பு அணுகுமுறையைக் கையாளுவதைத் தவிர்த்துக் கொள்ளல் வேண்டும். ஏனெனில், அனேக சம்பவங்கள் பாதுகாப்பு விவகாரத்தோடு தொடர்பற்றதாகும். இருந்தும் அவை, அரசியலாகும் போது, பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் அணுகப்படல் வேண்டும். ஆனால், அவர்கள் இவ் அணுகுமுறை இல்லாதநிலையில் வெளிப்படுகின்ற பிரச்சினைகள் மற்றும் நெருக்கடிகள் ஆகியவற்றை உருவாக்கி விடுகின்றனர்.
24. சமூக குழுக்கள் மற்றும் மத்ஹபுகள் அனைத்திலும் அரசாங்கம் தனது அதேயளவு இடைவெளியைப் பேணி, ஒரு மத்ஹபின் இலாபத்திற்காக சார்ந்து சென்று, அதன் திருப்திக்காக ஏனை குழுக்கள் மற்றும் மத்ஹபுகளை அதிருப்தியடையச் செய்வதைத் தவிர்த்தல் வேண்டும். ஏனெனில், இவ்வாறான அணுகுமுறை இறுதியில் அரசாங்கத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கிவிடும்.
25. அரச நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் தொடர்பான மக்களுடைய முறைப்பாடுகளையும், மனுக்களையும் விசாரணை செய்வதற்காக அரச மற்றும் சிவில் (குறைகேள்) மன்றம் ஒன்றை நிறுவி, அநீதியிழைக்கப்பட்டோர் தம் உரிமையைப் பெறவும், தவறிழைத்தோர் தண்டிக்கப்படவும் தீவிர முயற்சியை எடுத்தல் வேண்டும். இம்மன்றம், மாநகராட்சியின் கீழ் அமையப்பெற்று, அரசு தனது நம்பிக்கைக்குரிய உறுப்பினரில் சிலரை அதற்காக தெரிவு செய்வதோடு, மக்களும் தமக்கிடையில் பிரதிநிதிகளை, அரசாங்கப் பிரதிநிதிகளின் அளவிற்கு இம்மன்றத்திற்காகத் தெரிவு செய்வது சிறந்ததாகும். அதேபோன்று, இம்மன்றம் ஒவ்வொரு நகரிலும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை உள்ளடக்கிய குழுக்களைக் கொண்டிருத்தல் வேண்டும். இதன்மூலம், அநீதியிழைக்கப்பட்டோர் தமது நகரக் குழுக்களை அணுகவும், இக்குழு மாநகராட்சியின் கீழ் அமையப்பெறுகின்ற மன்றத்திற்கு அறிக்கையை சமர்ப்பிக்கவும், இம்மன்றமும், தொடர்புபட்ட நிறுவனங்களுக்கு முறைப்பாடுகளை வழங்குவும் முடியும்.
இறுதியாக, எங்களது உள்ளங்களைப் தூய்மையாக்கி, எங்களது நாவுகளை பரிசுத்தப்படுத்தி, எங்களுக்கு மத்தியில் பிணைப்பை ஏற்படுத்தி, எங்களை ஒன்றுமைப் படுத்தி, நம் எதிரிகளை தோல்வியடையச் செய்து, ‘தௌஹீத்’ எனும் தூயபதமான எமது சுலோகத்திற்கு உதவிட உயர்வான அல்லாஹுவிடம் பிரார்த்திக்கிறேன்.
‘அவர்கள் வர்ணிப்பதை விட்டும், கண்ணியத்தின் இறைவனான உம்முடைய இறைவன் தூயவன். மேலும் அவனது தூதர்கள் மீது சாந்தி உண்டாவதாக. இன்னும் புகழனைத்தும் அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்துபவனான அல்லாஹ்வுக்கே உரியது’
நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் மற்றும் அன்னாரின் பரிசுத்த குடும்பத்தினர் அலைஹிமுஸ்ஸலாம் ஆகியோரின் மீது சாந்தி உண்டாவதாக.
நிம்ர் பாகிருல் நிம்ர்,
03 ரஜப், 1428 ஹிஜ்ரி,
18 ஜுலை 2007 கி.பி
peace.lk