கறை படியா வரலாற்றைக் குறித்து ஐயமும், தெளிவும்

ஷீஆ இஸ்லாமிய நம்பிக்கையை கேள்விக்கு உட்படுத்துவதோடு, இமாம் ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய இஸ்லாமிய எழுச்சிப் போராட்டத்தை அர்த்தமற்றதாக மாற்றும் வகையில் இமாம் ஹுஸைன் மற்றும் கர்பலா சம்பவம் தொடர்பாக முன்வைக்கப்படுகின்ற சில கேள்விகளுக்கான பதில்களையும், தெளிவுகளையும் இங்கே நாம் தருகிறோம்.

கேள்வி 01: இமாம் ஹுஸைன் (அலை) ‘இல்முல்கைப்’ எனும் மறைவான ஞானத்தைக் கொண்டிருந்தார் என்றால், நிச்சயமாக தான் ஷஹீதாகுவதை அறிந்திருப்பார். இந்நிலையில், அவர் கர்பலாவுக்குச் சென்று, மரணித்திருந்தால், அது தற்கொலை இல்லையா?. அவ்வாறே, அவர் இல்முல்கைப்பைப் பெற்றிருந்தார் என்றால், முஸ்லிம் இப்னு அகீல் கூஃபாவில் கொலைசெய்யப்படுவார் என்பதையும் அறிந்திருப்பார். இந்நிலையில் அவரை அங்கே அனுப்பியதால் அவரது கொலைக்கு இவர் காரணமாகமாட்டாரா? எனவே, ஒன்று மறைவான ஞானத்தை இமாம் ஹுஸைன் பெற்றிருந்தார் என்பதை நம்புவது போன்று, அவர் தவறு செய்தார் என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அல்லது மறைவான ஞானம் அவருக்குக் கிடையாது என்ற நம்பிக்கைக்கு ஷீஆக்கள் வரவேண்டும்.

பதில்: முதலாவதாக, இல்முல்கைப் என்றால் என்ன? என்பதை அறியாத நிலையில்தான் இக்கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அல்லாஹ்வுக்கு இல்முல்கைப் இருக்கிறதா? அல்லது இல்லையா? என்று வினவினால், இருக்கின்றது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விடயமே. அப்படியானால், அல்லாஹு தஆலா ஏன் தன்னுடைய இமாம் ஷஹீதாகுவார் என்று அறிந்திருந்தும், அவரை கர்பலாவுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும்? உஹதுப்போரில் பெருமானார் (ஸல்) அவர்கள் காயமுற்று, தோல்வியைத் தழுவுவார் என்று தெரிந்தும், ஏன் அவரை உஹதுப் போரில் கலந்துகொள்ளச் செய்யவேண்டும்? ஷஹாதத்தை அடைந்த அத்தனை திருத்தூதர்களையும் ஏன் மரணத்தருவாய்க்கு அனுப்ப வேண்டும்?

எனவே, மறைவான ஞானத்தைப் பெற்றிருப்பதற்கும், அக்காரியம் நிகழ்வதை அனுமதிப்பதற்கும் இடையில் ஒரு காரணகாரியத் தொடர்பு கிடையாது. அப்படி, இதனைக் குறையாக எடுத்துக்கொண்டால் முதலில் இறைவனுடைய விடயத்திலேதான் குற்றம் கண்டுபிடிக்க வேண்டும்.

இல்முல்கைப் என்பது இறைவனுக்கு மாத்திரம் உரியது என்பதன் பொருள் என்ன? என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இல்முல்கைப் என்பது அவனுக்கு மாத்திரம் உரியது என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். என்றாலும், தனக்குரிய மறைவான ஞானத்தை பிறருக்குக் கொடுக்கமாட்டேன் என்று அல்லாஹு தஆலா எங்காவது கூறியிருக்கிறானா?

உதாரணமாக, நாங்கள் ‘அல்லாஹுவைக் கொண்டே அன்றி, எவ்வித சக்தியுமில்லை, எவ்வித விசைவுமில்லை’ (لا حول و لا قوة الا بالله) என்று நாம் கூறுகிறோம். அதாவது, சக்தி என்பது அல்லாஹு தஆலாவுக்கு மாத்திரம் உரியது. எனவே, அவனுடைய அந்த சக்தியை எமக்கும், உங்களுக்கும் வழங்கவில்லை என்று பொருள்படுமா? அல்லது சக்தி என்பது அல்லாஹ்வுக்கு உரியதுதான். என்றாலும், அவன் எமக்கும் அவற்றிலிருந்து தந்திருக்கிறான் என்று பொருள்படுமா?

இரண்டாவது விடயம்தான் சரி என்பதை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்கிறோம். ஏனெனில், நமது இயக்கப்பாட்டுக்கான சக்தி, எம்மிடம் இல்லாதிருப்பின் எம்மால் இயங்க முடியாமல் போயிருக்கும். இவ்வாறுதான் இல்முல்கைப் என்ற விடயமும். இல்முல்கைப் என்பது அல்லாஹ்வுக்கு மாத்திரம் உரியதுதான். என்றாலும், தான் பொருத்தமாகக் கருதுகின்ற நேரத்தில் தன் விஷேட அடியார்களுக்கு அதனை வழங்குகிறான் (ஜின் 26.27).

இறைநேசர்களுக்குரிய இல்முல்கைப் என்பது வரையறையற்றது கிடையாது. ஒரு நபியோ அல்லது இமாமோ எப்போதும் எல்லாவற்றிலும் இல்முல்கைபைக் கொண்டிருப்பதில்லை என்பதே நமது நம்பிக்கை. அல்லாஹு தஆலா தான் பொருத்தமாகக் கருதுகின்ற நேரத்தில் தன்னுடைய மறைவான அறிவிலிருந்து அவருக்குக் கொடுக்கிறான் (ஹுத் 49). எனவே, அல்லாஹ் தான் நாடுகின்ற நேரத்தில் மறைவான ஞானத்தை வழங்குகிறான். இது எப்போதும், எல்லாவற்றிலும் என்று பொருள்படமாட்டாது. அதாவது, அல்லாஹு தஆலாவைப் போன்று இவர்களும் முக்காலமும், எட்டுத்திக்கும் பற்றிய மறைவான ஞானத்தைப் பெற்றிருப்பதாக ஷீஆ முஸ்லிம்கள் நம்புவதில்லை. அவ்வாறு, நம்புவது ஷிர்க்காகும்.

எனவே, அல்லாஹு தஆலா, இமாம் ஹுஸைனுக்கு இந்த அறிவை வழங்கியிருக்கவும் முடியும் அல்லது வழங்காமலிருக்கவும் முடியும். அவருக்கு இல்முல்கைப் வழங்கியதாகவே வைத்துக்கொள்வோம். உங்களை ஷஹீதாக்குவார்கள் என்ற இல்முல்கைப்பை வழங்கிய இறைவன்தான் அவ்விடத்துக்கு, அவர் செல்வதை அனுமதித்திருந்தால், அதில் என்ன தவறு இருக்கிறது?. இதுதான் உண்மையான ஏகத்துவமும், தெய்வீக அடிமைத்துவமும் ஆகும். தான் ஷஹீதாவேன் என்று அறிந்திருந்தும் இறைவனுடைய கட்டளையை நிறைவேற்றப் புறப்பட்டு, தான் ஷஹீதாகியிருந்தால் அதுதான் உண்மையான ‘இபாதத்’ எனும் தெய்வீக அடிபணிவாகும். எனவே இது தற்கொலையுமல்ல, பாவமும் கிடையாது. இது நன்மைக்குரிய விடயமே.

அவ்வாறே, அவர் இல்முல்கைப்பைக் கொண்டிருக்கவில்லை என கற்பனை செய்துகொள்வோம். அத்தனை மடல்களும் இமாமைச் சென்றடைந்த நேரத்தில் ஷரீஆவின் கண்ணோட்டத்தில் அவர் அங்கே சென்று, அரசமைப்பது அவருக்கு கடமையாகிவிட்டது. அப்படி அவர் செய்யவில்லை என்றால், ஷரீஆக்கடமையை நிறைவேற்றாதவராக மாறிவிடுவார். இந்த வகையில் கூபாவாசிகள் தாம் மடல்களை அனுப்பியும், இமாம் வரவில்லை என்று நாளை மறுமையில் வாதிடவும் முடியும். எனவே, இந்த வகையிலும் இமாம் தவறு செய்யவில்லை.

மேலும், இல்முல்கைப்போடு ஏன் முஸ்லிம் இப்னு அகீலை கூபாவுக்கு அனுப்பினார் என்ற கேள்விக்குரிய பதிலும், மேலே கூறியவற்றிலிருந்து தெளிவாகிவிடுகிறது. இல்முல்கைப் என்பது எப்போதும் எல்லாவற்றையும் பற்றியதாக இருக்காது. இமாம் இதனை அறியாமல் இருந்திருக்கவும் கூடும். அல்லது இறைவன் புறத்திலிருந்து அது அறிவிக்கப்பட்டிருக்கவும் கூடும். அதேநேரத்தில் மக்களின் மீது தனது சாட்சியத்தை நிறைவேற்றும் வகையில் முஸ்லிமை கூபாவுக்கு அனுப்புமாறு இறைவன் நாடியிருக்கவும் கூடும். எனவே, இந்த வகையிலும் இமாம் ஹுஸைன் தவறு செய்யவில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

கேள்வி 02: ஏன் இமாம் ஹுஸைன் மக்காவில் புரட்சி செய்யாது, கூபாவுக்குச் சென்றார்? இது கூபாவுக்கு தப்பிச்சென்றார் என்று அர்த்தமாகாதா?

பதில்: இமாமை மதீனாவில் வைத்து, புனித கஃபாவின் அருகாமையிலேயே கொலை செய்துவிட திட்டமிட்டிருந்தார்கள் என்பது உண்மைதான். என்றாலும், அவரைக் கொலை செய்வதற்காக மதீனாவுக்கு அனுப்பப்பட்ட நபர்கள் யார்? என்பது மக்களுக்குச் சரியாக அறியப்பட்டிருக்கவில்லை. எனவே, அங்கே ஷஹீதாக்கப்பட்டிருந்தால் யார் கொலை செய்தார்? என்பதும், கொலையின் பின்னணியில் யார் இருக்கிறார்? என்பதும் வரலாற்றில் அறியப்படாமலேயே போயிருக்கும்.

ஆனால், கர்பலாவில் அவ்வாறில்லை. அங்கே, யசீதுடைய படைதான் இருந்தது என்பது யாவரும் அறிந்த உண்மை. அங்கே, யசீதுடைய தளபதிதான் இருந்தான் என்பதும் தெளிவானதே. இவ்வாறு, அனைத்தும் முழுமையாக தெளிவாக இருக்கும் நிலையில், கூபாவை நோக்கி இமாம் தப்பிச்சென்றார் என்பது அர்த்தமற்ற குற்றச்சாட்டாகும். அதேநேரம், உண்மையில் ஆயிரக்கணக்கான எதிரிகளின் முன்னே தாம் போராடவேண்டியிருக்கும் என்பதை அறிந்துதான் அங்கே சென்றார் என்பது, அவருடைய துணிச்சலையும், வீரத்தையும் காட்டுகிறது.

கேள்வி 03: ஏன் இமாம் ஹுஸைன் உடனே யசீதுக்கு எதிராகப் போராட்டத்தைத் தொடங்காமல், 12000 மடல்கள் அவரை வந்தடையும்வரைக்கும் காத்துக்கொண்டிருந்தார்?

தில்: முதலாவதாக, இமாம் ஹஸன் (அலை) அவர்கள் உயிரோடு இருந்தபோது எதனையும் தீர்மானிக்கும் நிலையில் இமாம் ஹுஸைன் இருக்கவில்லை. ஏனெனில், இமாம் ஹுஸைனுக்கு, ‘இமாமாக’ இமாம் ஹஸன் இருந்தார். ‘இமாம்’ இருக்கின்றபோது, அவருக்கே கட்டுப்பட வேண்டியிருந்தது. இதனால், இமாம் ஹஸனின் முடிவுக்கு அமைவாக, இமாம் ஹுஸைன் நடந்துகொண்டார்.

இரண்டாவதாக, இமாம் கஃபாவைப் போன்றவர். மக்கள் அவரை நாடிச்செல்ல வேண்டும். மக்களோ அவரை நாடிச் செல்லாதபோது, எந்தவொரு மனிதவளமும் இல்லாதநிலையில் அவருக்கு அவ்வாறான கடமைப்பாடு இல்லாமல் போய்விடுகிறது. இதுபோன்ற சம்பவம், இமாம் அலீ (அலை) அவர்களுடைய விடயத்திலும் நிகழ்ந்திருப்பதைப் பார்க்கிறோம். மக்கள் அவரை நாடிச்செல்லாத வரைக்கும், அவர் பொறுமையாக இருந்தார். ஏனெனில், போராடுவதற்கான கடமைப்பாட்டை அவர் கொண்டிருக்கவில்லை.

எனவேதான், இமாம் ஹுஸைன் (அலை), கூஃபா மக்களிடமிருந்து அழைப்பு மடல்களைப் பெற்றுக்கொண்டபோது, மார்க்க ரீதியான கடமைப்பாட்டுக்கு உள்ளாகி போராட்டத்தைத் தொடங்கியதைப் பார்க்கிறோம்.

கேள்வி 04: ஏன் இமாம் ஹுஸைன் முஆவியாவின் சகோதரியின் மகள் ‘லைலா’வைத் திருமணம் முடித்தார்? ஏன் யசீத் உதவித்தொகையை நிறுத்திக்கொண்டதும் புரட்சிசெய்தார்?

முதலாவதாக, யசீதினால் இமாமுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது என்பது ஆதாரமற்ற ஒன்றாகும். சதகா என்பது அஹ்லுல்பைத்துக்கு ஹராமாக்கப்பட்டுள்ளது. முஆவியாவால் கூட அஹ்லுல்பைத்துக்களுக்கு சதகா கொடுக்க முடியவில்லை. இரண்டாவதாக, இமாம் ஹஸன் முஆவியாவுக்கு எதிராகப் போரிட்டார் என்ற வெளிப்படையான செய்திகள் கூட இல்லை. மூன்றாவதாக, அப்படி உதவித்தொகை பெறுமளவுக்கு, திருமணம் என்பது நெருக்கமான குடும்ப உறவைக் கொண்டிருந்தது என்றும் கிடையாது. நபிகளார் (ஸல்) கூட தன்னுடைய எதிரியின் மகளோடு திருமணம் முடித்திருந்தார்கள். அல்லது ஹஸ்ரத் நூஹ் (அலை) அவர்களுடைய மனைவி காஃபிராக இருந்தார் அல்லது இமாம் ஹஸன் அவர்களுடைய மனைவியே அவருக்கு நஞ்சூட்டி அவர் ஷஹீதாவதற்குக் காரணமாக இருந்தார் என்பவற்றைக் கருத்திற்கொள்ளலாம்.

கேள்வி 05: ஏன் ஹஸ்ரத் சைனப் அவர்களின் கணவரான ஹஸரத் அப்துல்லாஹ் (ரழி) கர்பலா நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை?

பதில்: ஹஸரத் அப்துல்லாஹ் இப்னு ஜஃபர் (ரழி) அவர்களே தாமாக தம்முடைய மனைவியையும், குழந்தைகளையும் இமாம் ஹுஸைனோடு அனுப்பியிருந்தார்கள். ஹஸரத் அப்துல்லாஹ் அவர்கள் கர்பலாவில் கலந்துகொள்ளாமைக்காக குறிப்பிடப்பட்ட காரணங்களின் அடிப்படையில் அவர் கலந்துகொள்ளாமை ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதே என்பது 100 வீதம் எமக்கு உறுதியான ஒன்ற. ஏனெனில், அடுத்துவந்த எமது இமாம்கள் அவரை மதித்து, அவருக்கு மரியாதை செலுத்தியதோடு சிறியதொரு இகழ்ச்சியையும் அவர்மீது போடவில்லை. ஹஸ்ரத் அப்துல்லா இப்னு ஜஃபர் அவர்களுடைய விடயத்திலே அவர்களது மகத்துவம் மற்றும் அந்தஸ்து விடயத்திலே நஸ்ர் பின் முசாஹிம் என்பவர் ‘வக்அத்துல் சிஃப்பீன்’ எனும் நூலில் விளக்கிக் கூறி இவ்வாறு, குறிப்பிட்டிருந்தார், ‘இமாம் அலீ (அலை) அவர்களுக்குச் சார்பாக, அந்த யுத்தத்தில் கலந்துகொண்டு போராடினார். எனவே அவர் ஒரு முஜாஹிதாகவும் இருக்கிறார். ஜிஹாத் செய்வதற்கான சூழ்நிலைகள் தனக்கு உருவானபோது முஆவியாவுக்கு எதிராக யுத்தம் செய்தார். எனவே, யசீதோடு யுத்தம் செய்கின்ற சூழல் வந்திருந்தால் அவ்வாறே செய்திருப்பார்கள். இவ்விடயத்தில் அவர் அச்சம் கொண்டிருக்கவுமில்லை. சந்தேகம் கொண்டிருக்கவுமில்லை’ என்பதைக் குறிப்பிட்டுவிட்டு அவர் ஈமானோடும், அஹ்லுல்பைத் நேசத்தோடும் இருந்தவர் என்பதாகப் போற்றியுள்ளார். எனவே, நாம் அவருடைய மகத்துவத்தில் சந்தேகம் கொள்ளவில்லை. ஹஸ்ரத் அப்துல்லாஹ் அவர்கள் இமாம்களான ஹஸன் ஹுஸைன் அவர்களை நேசித்திருந்ததால் அவர்களுடைய சந்நிதானத்திலே பணிவோடு நடந்துகொண்டார். இது குறித்து ஹதீஸ்கலை அறிஞரான சேய்க் தப்ரீஸி (ரஹ்) அவர்கள் தன்னுடைய அல்-இஹ்திஜாஜ் எனும் கிரந்தத்தில் ரிவாயத் ஒன்றை இவ்வாறு பதிவு செய்திருக்கிறார்.

‘அப்துல்லாஹ் அவர்கள் இமாம்களான ஹஸன், ஹுஸைன் அவர்களுடைய வியத்தில் நம்பிக்கை கொண்டிருந்தார். ஒரு நாள் முஆவியா மதீனாவில் வைத்து அப்துல்லாஹ் இப்னு ஜஃபர், பழ்ல் இப்னு அப்பாஸ் ஆகியோரோடு இருந்த சபையிலே அப்துல்லாஹ் இப்னு ஜஃபரை நோக்கி ஹஸன் ஹுஸைன் விடயத்திலே ஏன் இந்தளவு மதிப்பும், மரியாதையும்? என்றார். இவ்விருவரும் உம்மைவிடச் சிறந்தோர் அல்ல. இவர்களின் தந்தை உமது தந்தையைவிடச் சிறந்தவர் அல்ல. இவர்களுடைய தாய் பெருமானாரின் மகளாக இருந்திரா விட்டால் உமது தாயார் அஸ்மா பின்த் உமைஸ், இவர்களுடைய தாயை விடவும் குறைந்தவரல்ல என்றிருப்பேன் என்று முஆவியா தொடர்ந்து கூறினார். அப்போது, ஹஸரத் அப்துல்லாஹ் அவர்கள் இவ்வார்த்தைகளைக் கேட்டு, கோபமுற்று இவ்வாறு கூறினார். இவ்விருவர் தொடர்பாகவும், இவர்களின் பெற்றோர் தொடர்பாகவும் உம்முடைய அறிவானது குறைவாக உள்ளது. அல்லாஹ்மீது ஆணையாக இவர்கள் என்னைவிடச் சிறந்தவர்கள். இவர்களுடைய தந்தை என்னுடைய தந்தையைவிடச் சிறந்தவர். இவர்களுடைய தாய் என்னுடைய தாயைவிடச் சிறந்தவர்’.

ஏன் ஹஸரத் அப்துல்லாஹ் கர்பலாவில் கலந்துகொள்ளவில்லை என்பதற்கான காரணங்களைப் பார்ப்போம். ஹஸரத் அப்துல்லாஹ் இமாமின் மீது கொண்ட நேசத்தின் காரணமாக கூஃபாவை நோக்கிய பயணத்தை விட்டும் இமாமைத் தடுப்பதற்கு முயற்சித்திருந்தார் என்பது உண்மைதான். என்றாலும், இமாமின் திடகாத்திரமான முடிவைக் கண்ணுற்றபோது இப்பயணத்திலே நலவு இருப்பதைப் புரிந்துகொண்டார். இப்போராட்டத்திற்கு, தான் ஒத்துழைப்பு வழங்கும் வகையில் தன்னுடைய பிள்ளைகளையும், தன்னுடைய மனைவியார் ஹஸரத் ஸைனப் அவர்களையும் இப்பயணத்தில் பங்குகொள்வதற்கு அனுமதியளித்திருந்தார். கர்பலா யுத்தத்திலே இமாம் ஹுஸைனோடு இணைந்து, ஹஸரத் அப்துல்லாஹ் இப்னு ஜஃபர் அவர்களின் மகனான ‘அவ்ன்’ என்பவரும் போராடியிருந்தார் என்பதாக கதீஸ்கலை அறிஞரான சேய்க் தூஸீ (ரஹ்) அவர்கள் தமது அர்-ரிஜால் எனும் கிரந்தத்தில் குறிப்பிடுகிறார். மேலும், ஹஸரத் அப்துல்லாஹ் இப்னு ஜஃபர் அவர்களின் மற்றொரு மகனார் ‘முஹம்மத்’ இமாம் ஹுஸைனோடு கொலை செய்யப்பட்டிருந்தார் என்பதாகவும் குறிப்பிடுகிறார்.

ஹஸரத் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கர்பலா நிகழ்வில் கலந்துகொள்ளாமைக்கான காரணங்களில் ஒன்று, அவர் பார்வையற்றிருந்தமையும், உடல்ரீதியான இயலாமையுமாகும். இயற்கையாகவே பார்வையற்ற ஒருவரால் யுத்தத்தில் கலந்துகொள்ள முடியாது. இந்த வகையில் அவருக்கு அக்கடமைப்பாடு இருக்கவில்லை. என்றாலும், ஹஸரத் அப்துல்லாஹ் அவர்கள் இமாமுக்கு தன்னால் முடிந்தளவு உதவியிருந்தார்.

கதீஸ்கலை அறிஞரான சேய்க் முஃபீத் (ரஹ்) அல்-இர்ஷாத் எனும் கிரந்தத்தில் குறிப்பிடுகிறார். இமாம் ஹுஸைனை, தான் நேசித்ததன் காரணமாக யுத்தத்திற்கு செல்லாமல் இருப்பதை இமாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக பெரும் முயற்சி எடுத்தார். இமாம் தன்னுடைய முடிவிலிருந்து மாறவில்லை என்பதை கண்ணுற்றதும் அவர்கள் தன்னுடைய முடிவில் உறுதியாய் இருப்பதைப் புரிந்துகொண்டார்.

‘தாயிரது மஆரிபுத் தஷய்யுஃ’ எனும் நூலில் அவர் கலந்துகொள்ளாமைக்கான காரணங்களில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டிருப்பது, மக்காவிலும், மதீனாவிலும் தங்கியிருந்து பனூஹாஷிம்களைப் பாதுகாப்பதற்கு இமாம், அவருக்கு கட்டளையிட்டிருந்தார். அவ்வாறு ‘வக்அத்துஸ் ஸிஃப்பீன்’ எனும் நூலில் ‘அஃயானு பனூஹாஷிம்’ (ஹாஷிம் வம்சத்து கண்கள்) என வர்ணிக்கப்பட்டு வந்துள்ளது. மற்றொரு ரிவாயத், அல்-இர்ஷாத் எனும் கிரந்தத்தில் பின்வருமாறு பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்பலாவில் ஹஸரத் அப்துல்லாஹ் அவருடைய பிள்ளைகள் ஷஹீதாக்கப்பட்ட செய்தி, தனது காதில் விழுந்தபோது இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன் என்றார்’.

‘அப்போது, இமாம் ஹுஸைனின் மூலமாகத்தான் இத்துயரத்தை நாம் அடைந்துகொண்டோம் என்பதாக அபுஸ்ஸலாசில் என்ற ஹஸரத் அப்துல்லாஹ்வின் அடிமை கூறியபோது இவ்வார்த்தையை செவியுற்ற ஹஸரத் அப்துல்லாஹ் அவர்கள், கோபங்கொண்டு தமது அடிமையின் தலையிலும், வாயிலும் செருப்பினால் அடித்துவிட்டு, அசிங்கமான பெண்ணின் மகனே…! (அறேபிய கலாசாரத்தில் இது சாதாரணமானதே). இமாம் ஹுஸைனின் விடயத்திலா? இவ்வாறு குறிப்பிட்டாய். அல்லாஹ்வின்மீது ஆணையாக இமாமுக்கு அருகாமையில் நான் சமூகமளித்திருந்தால் அவரின் அருகில் நானும் ஷஹீதாகும் வரைக்கும் அவரைவிட்டு விலகாமல் இருந்திருப்பேன் என்றார்’.

எனவே, கர்பலா விடயத்தில் ஹஸரத் அப்துல்லாஹ் (ரழி) அவர்களது நிலைப்பாடு எமக்குத் தெளிவான ஒன்றாகும்.

கேள்வி 06: கர்பலா விடயத்திலும், இமாம் ஹுஸைன் அவர்களுடைய விடயத்திலும் பல்வேறு விடயங்கள் உண்மைக்குப் புறம்பாக, புனையப்பட்டுள்ளன. இமாமுக்கு ருகையா என்ற பெயரில் எந்தவொரு மகளும் இல்லாதிருந்த போதும், இருப்பதாகப் புனைப்பட்டுள்ளதே?

பதில்: செய்யித் இப்னு தாவூஸ் (ரஹ்) அவர்கள், அல்-லுஹுஃப் எனும் கிரந்தத்தில் 123ம் பக்கத்தில், இமாம் ஹுஸைனுடைய பெண் பிள்ளைகளில் ஹஸ்ரத் ருகையா அவர்களுடைய பெயரையும் குறிப்பிட்டிருக்கிறார். ஹாயிரி (ரஹ்) அவர்களின் மஆலியுஸ் சிப்தைன் எனும் நூலில், பாகம் 2 பக்கம் 161 மற்றும் 170இல் இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது. இமாம் ஹுஸைனுக்கு சிறிய மகள் ஒருவர் இருந்தார். அவருக்கு ருகையா என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. அவர் மூன்று வயதைக் கொண்டிருந்தார்.
மக்தலுல் ஹுஸைன் எனும் நூலில் 84வது பக்கத்தில் இப்னு அபீ முஹன்னிப் (ரஹ்) அவர்கள், இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் தமது பெண் குழந்தைகளைப் பெயர் சொல்லி அழைக்கும்போது ‘யா ருகையா’ என்றும் அழைத்திருந்தார்.

இஹ்காகுல் ஹக் எனும் நூலில் 11வது பாகம் 633வது பக்கத்தில் இமாம் ஷூஸ்தரி (ரஹ்) அவர்கள், இமாம் ஹுஸைன் தமது குழந்தைகளை அழைக்கும் போது ‘யா ருகையா’ என்றும் அழைத்திருப்பதாக பதிவு செய்துள்ளார். ஷீஆ அறிஞர்களின் ஏகோபித்த கருத்தின் பிரகாரம் ‘ருகையா’ என்ற பெயரில் இமாம் ஹுஸைனுக்கு பெண் குழந்தையொன்று இருந்திருப்பது தெளிவானது. ஆயத்துல்லாஹ் றூஹானி, ஷீராஸி, நூரி, மஸாஹிரி மற்றும் காஷானி போன்ற தற்கால முதல்நிலை ஷீஆ இஸ்லாமிய அறிஞர்களும் இதனை உறுதி செய்துள்ளனர்.

இமாம் பைஹக்கீ (ரஹ்) அவர்களுடைய ‘லுபாபுல் இன்ஸாப்’ எனும் கிரந்தத்தில் 3வது பாகம் 355வது பக்கதில் பின்வரும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இமாமுடைய பிள்ளைகளில் சைனுல் ஆபிதீன், ஃபாத்திமா, ஷகீனா மற்றும் ருகையா போன்றோரைத் தவிர வேறு யாரும் எஞ்சியிருக்கவில்லை.

எனவே, இமாம் ஹுஸைன் அவர்களுக்கு ருகையா என்ற பெயரில் பெண் குழந்தையொன்று இருந்தமை கர்பலா சம்பத்தோடு புனையப்பட்ட ஒன்று கிடையாது என்பது தெளிவாகிறது.

peace.lk

Scroll to Top
Scroll to Top