நூல் அறிமுகம்: ‘ஷீயி மற்றும் சுன்னி ஸலஃபியம்’
சமூக ஒருங்கிணைப்புக்கு எதிரான அதன் தாக்கம் – ஓர் ஆய்வு
![](https://peace.lk/wp-content/uploads/2019/12/17352521_391725454529489_5110819659460337573_n.jpg)
ஆசிரியர்: கலாநிதி அப்துல்லாஹ் அல்-புரைதி
வெளியீடு: Arab Network for Research and Publishing, Lebanon
இது கோட்பாடு மற்றும் நடைமுறைக் கோணங்களில் ஷீயி ஸஃலபியத்தையும், சுன்னி ஸலஃபியத்தையும் அலசுகின்ற முக்கியமான நூலாகும்.
—————————————————————————————–
நூலின் பின் அட்டைக் குறிப்பிலிருந்து…
அரசியலானது, தந்ரோபாய முறைகளினூடாக சமூக புலத்தை இறுக்கமாக்கி, அதனை பலவீனப்படுத்தி, அதன் கூறுகளை வலுவிழக்கச் செய்யும் நோக்கில் சதாவும் செயற்பட்டுக்கொண்டே இருக்கிறது. இதற்காக, அது சமூக ஒருங்கிணைப்பை அச்சுறுத்துகின்ற வழிகளில் மிக முக்கிய ஒன்றாகக் கருதப்படுகின்ற ‘குலவாதப் பிரமாண’த்தின் மீது குவிமையப்பட்டு நிற்கிறது.
‘ஷீயி மற்றும் சுன்னி ஸலஃபியம்’
சமூக ஒருங்கிணைப்புக்கு எதிரான அதன் தாக்கம் – ஓர் ஆய்வு
‘ஷீயி மற்றும் சுன்னி ஸஃலபியம்’ என்ற இந்நூல், குலவாத சூழமைவில் சமூக ஒருங்கிணைப்பை அச்சுறுத்தக் கூடியதாகக் கருதப்படுகின்ற ‘ஸஃலபிய சிந்தனை’யை துல்லியமாக கண்டடைவதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்ற ஒரு ஆய்வாகும்.
அரசியலையும், கலாசாரத்தையும் பிரிக்கமுடியாது என்பதைக் கவனத்திற்கொண்டு, கலாநிதி அப்துல்லாஹ் அல்-புரைதி தனது இந்த நூலில் ‘சமூக வகுப்பாக்கம்’, ‘ஒருநிலைப்போக்கு’, ‘காழ்ப்புணர்ச்சி’, ‘சமூக இயக்கம்’ மற்றும் ‘சுய அடையாளம்’ போன்ற அறிவார்ந்த, கலாசாரரீதியிலான சொற்றொகுதிகளையும், அவை சார்ந்த பல்வேறு பிரச்சினைகளையும் விளக்க முற்பட்டுள்ளார்.
மேலும், அறேபிய உலகில் சமூக ஒருங்கிணைப்பை அச்சுறுத்துவதிலே, அதேபோன்று அறேபிய எழுச்சிப் போராட்டத்திற்கு எதிரான தடங்கலைத் தோற்றுவிப்பதிலே தாக்கம் செலுத்துகின்ற சிந்தனை என்றவகையில், ஒருபுறம், ‘ஷீயி ஸஃலபிய சிந்தனை’த் தாக்கத்தினாலும், மறுபுறம், ‘சுன்னி ஸஃலபிய சிந்தனை’த் தாக்கத்தினாலும் விளைந்த செயற்பாடுகளாகவும், நடவடிக்கைகளாகவும் அவற்றை அவர் வர்ணித்துள்ளார்.
எனவே, இந்நூல் இரு அம்சங்களில் கவனம் செலுத்துகின்றது. முதலாவது, சமூக ஒருங்கிணைப்பின் யதார்த்தத்தை புலப்படுத்துகின்ற ‘கோட்பாடு’ சார்ந்தது. இரண்டாவது, – ஷீயி மற்றும் சுன்னி – சமய உட்பிரிவுவாத வடிவங்களில் ‘ஸஃலபிய சிந்தனை’ பற்றி அலசுகின்ற ‘நடைமுறை’ சார்ந்தது.
ஆழமான ஆய்விலிருந்தோ, விமர்சனத் திறனாய்விலிருந்தோ நீங்கிவிடாத வகையில் இந்நூலின் ஆசிரியர், பிரசித்தி பெற்ற ஆய்வு முறைகளுக்கு அமைவாக, பல்வகை அணுகுமுறையின் துணையோடும், பகுப்பாய்வு மற்றும் வியாக்கியான முறைகளைப் பயன்படுத்தியும் தமது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.
—————————————————————————————————–
நூலிலிருந்து புரிந்துகொள்பவை…
![](https://peace.lk/wp-content/uploads/2019/12/17359125_391726417862726_2496126309564587349_o.jpg)
1- ‘சமூக ஒருங்கிணைப்பு’ இந்நூலின் பிரதான வலியுறுத்தலாகும். சமூக முரண்பாடுகள் மற்றும் மோதல்களிலிருந்து விடுபட்டு, சமூக ஒறுமைப்பாடு மற்றும் சகவாழ்வு என்ற மேல்நிலையை நோக்கி நாம் பயணிக்க வேண்டியுள்ளது. அதேபோன்று, சமூகத்திற்கு களங்கம் கற்பிப்பதிலிருந்தும் நாம் விடுபடவேண்டியுள்ளது. ‘சுன்னி ஸஃலபிகள்’ ஷீஆக்களுக்கு ‘ராஃபிழி’ என்ற களங்கத்தையும், ‘ஷீஆ ஸஃலபிகள்’ சுன்னிகளுக்கு ‘நாஸிபி’ என்ற களங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2- ஸலஃபியம் என்பது இன்று சர்வதேச சூழலில் எதிர்மறையான, முற்போக்கான ஒன்றாக மாறியுள்ளது. போர்க்குணம், பிடிவாதம் மற்றும் தீவிரவாதம் போன்ற வடிவங்களில் பொருட்படுத்தப்படுகிறது.
இவ்வகையில் ஷீஆக்களிலும், சுன்னிகளிலும் இவ்வாறான பண்புகளைக் கொண்டு செயற்படும் குழுக்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஒருவரையொருவர் மாறிமாறி ‘குஃப்ர்’ குற்றம் சுமத்துவதில் பின்நிற்கவில்லை.
3- ஸலஃபியம் என்பது ‘முன்னோர்முதல் வாதம்’ என்ற பொருளில், ஷீயிஸத்திலும் சரி, சுன்னிஸத்திலும் சரி தமக்கென்ற ஒரு குறிப்பிட்ட, வரையறுத்த முன்னோரை முற்படுத்திச் செயற்படுவது குறிப்பிடத்தக்கது.
சுன்னி ஸலஃபியம் ‘உமவி சுன்னிஸத்’தையும், ஷீயி ஸலஃபியம் ‘ஷபவி ஷீயிஸத்’தையும் முன்னுரிமைப்படுத்தி, ஆதரிக்கின்றது. சுன்னி ஸலஃபியம் ஒழுங்குபடுத்தப்பட்ட கட்டமைப்பிலிருந்து விடுபட்டு, தன்னிச்சையான போக்கைக் கொண்டதாகும். ஷீயி ஸலஃபியம் சுயமான ஆய்வுகளற்ற, கண்மூடித்தனமான பின்பற்றுதலைக் கொண்டதாகும்.
4- இவ்விரு ஸலஃபியமும் தாம் ஆதரவளிக்கின்ற விஷேட அரசியல் தலைமைத்துவங்களுக்கு தமது ஆதரவாளர்களை பணிப்பதன் மூலம் பிராந்தியத்தில் சமூக ஒருமைப்பாட்டிற்குத் தடையாக அமைந்து வருவதோடு, இஸ்லாமிய உட்பிரிவுகளின் நெருக்கப்பாட்டிற்கு தடையாகவும் அமைந்துள்ளது.
5- ஸலஃபி சிந்தனையின் விஷேட பண்புகளில் ஒன்று, தீவிரப்போக்காகும். சகிப்புத்தன்மையற்ற போக்குகளை சமூகமயப்படுத்துவதனூடாக சமூக அங்கத்தவர்களிடையே வகுப்புவாத, குலவாத காழ்ப்புணர்ச்சிகளை உருவாக்கிவிடுகின்றது. இதனால், சமூகத்தில் ஒருமைப்பாட்டிற்கும், சகவாழ்விற்கும் இடமில்லாமல் போய்விடுகின்றது.
6- ஸலஃபிய சிந்தனையானது, குறிப்பிட்ட வரையறைக்குள்ளேயே அமையப்பெற்ற ஒரு மீள்சுழற்சி சிந்தனையே அன்றி, ஆக்கப்பாடான சிந்தனையில்லை.
சமகால சூழமைவுகளுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக்கொள்ளும் ஆற்றலை இழந்துள்ளமையினால், மிகவும் இருக்கமான நிலைக்குள் அது சிக்கியுள்ளது. உலகப் போக்குகளின் இயங்கும் தன்மையை அது மறுத்துவருவதால், பல்வேறு விடயங்களுக்கான சரியான தீர்வை அதனால் முன்வைக்க முடியவில்லை.
7- ஷீயி, சுன்னி ஸலஃபிகள் ஒரு ஷீஆ மர்ஜஃயின் ஃபத்வாவுக்கும், ஒரு சுன்னி முஃப்தியின் ஃபத்வாவுக்கும் வரையறையற்ற முறையில் கட்டுப்பட வேண்டும் என்ற நிலையை சமூகத்தில் உருவாக்கி, அதன் ஆதரவாளர்களைத் தூண்டிவிடுவதன் மூலம் ஒருவரையொருவர் பழிவாங்கவும், கொலைசெய்யவும் காரணமாகிறார்கள்.
8- இவ்வாறான கட்டுப்பாடுகளினால் ஸலஃபியமானது, சமூகத்தின் தானியங்குதன்மையைப் போக்கிவிடுகிறது. இதன் மூலம் இஸ்லாமிய சமூகம், ‘கூட்டு சுய அடையாள’த்தைப் பெற்று, செயற்படுவதற்கு தடையாக அமைந்துவிடுகிறது.