ஆசிரியர்களின் பெரும் பணி – உயரிய விழுமியங்களுக்கான திறன்களைச் செழிப்பாக்கும் வகையில் கற்பித்தலாகும்

The great work of teachers
Teaching to flourish talents for transcendent values

 

வருடம்தோரும் மே 01ம் திகதி, பேராசிரியர் ஷஹீத் முர்தஸா முதஹ்ஹரி அவர்களின் ஷஹாதத் தினத்தை முன்னிட்டு ஈரானில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

“நன்மை பயக்கும் அறிவானது ஒரு நாட்டின் செழிப்பையும், ஒரு இளைஞரின் ஆன்மீக உறுதிப்பாட்டையும், தன்னம்பிக்கையையும் ஊக்குவிக்கிறது.”

“கல்வி முறையின் குறிக்கோள் ஒரு நீதியான மற்றும் இலட்சியமுள்ள ஆன்மீக சமூகத்தை உருவாக்குவது மட்டுமே.”

பாடசாலைகள், பல்கலைக் கழகங்கள் மற்றும் ஆன்மீக கலாபீடங்களில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும், ஈரானின் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு வழங்கிய வாழ்த்துச் செய்தியில் ஈரான் இஸ்லாமியக் குடியரசின் அதிஉயர் தலைவர் இமாம் செய்யித் அலீ காமினி அவர்கள், நீதியையும், இலட்சியத்தையும் பின்பற்றும் ஒரு ஆன்மீக சமுதாயத்தை உருவாக்கும் நோக்குடன் இஸ்லாமிய மற்றும் புரட்சியின் இலக்கு சார்ந்த விழுமியங்களின் அடிப்படையில் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் திறமைகளைச் செழிப்படையச் செய்யும் கற்பித்தல்தான் ஆசிரியர்களின் பெரும் பணியும், புரட்சியுமாகும் என்பதைச் சுட்டிக்காட்டி, இந்தப் பாதையில் பயிற்றுவிக்கப்படும் இளம் தலைமுறையினர் வேறு எந்த மதிப்புமிக்க விடயத்தோடும் ஒப்பிட முடியாதளவுக்கு மிகப்பெரும் செல்வமாகக் காணப்படுகின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.

இமாம் செய்யித் அலீ காமினியின் வாழ்த்துச் செய்தியின் உரை

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

நாட்டினுடைய சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் சிந்தனைகளையும், அறிவையும் வளர்க்கும் பணியில் பாடசாலைகள், பல்கலைக் கழகங்கள் மற்றும் ஆன்மீகக் கலாபீடங்களில் செயலாற்றுகின்ற அன்பான ஆசிரியர்கள் அனைவருக்கும் ‘ஆசிரியர் தின வாழ்த்துகளை’ தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆசிரியர் பணியை இறைத்தூதர்களின் பணியெனக் கருதிய இமாம் குமைனி (ரஹ்) அவர்களின் கூற்று, ஒரு பிரச்சார முழக்கமல்ல. இது திருக்குர்ஆனியக் கூற்றாகும். திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகின்றது:

ویزکیهم و یعلمهم الکتاب و الحمکة…

உளத்தூய்மையாக்கம், கற்பித்தல், நூல் மற்றும் தெய்வீக ஞானம் என்பன இஸ்லாம் மற்றும் ஏனைய அனைத்து நபிமார்களிடத்திலும் மிகவும் முக்கியமான நான்கு சொற்களாகும். மற்றொரு முக்கியமான சொல் நீதியை நிலை நாட்டப் போராடுவதாகும். நுபுவ்வத் எனும் தீர்க்கதரிசனப் பள்ளியில் மானுட தலைமுறையினர் வேதநூல் மற்றும் ஞானத்தின் மூலம் அறிவூட்டப்பட்டு, பின்னர் நீதியின் அடிப்படையிலான வாழ்க்கையைக் கட்டியெழுப்புவார்கள். இந்தத் தொடரில், மனித சமுதாயங்கள் மனிதன் படைக்கப்பட்டதன் குறிக்கோள்களை அடைந்துகொள்கின்றன.

இஸ்லாமிய ஒழுங்கு நீதியையும், இலட்சியத்தையும் பின்பற்றும் ஒரு ஆன்மீக சமுதாயத்தை உருவாக்குதல் எனும் குறிக்கோளுடன் தான் உருவாகியுள்ளது. மேலும், நாட்டின் கல்வி ஒழுங்கும் கூட இஸ்லாமிய ஒழுங்கின் பொதுவான குறிக்கோளைத் தவிர வேறு குறிக்கோளைக் கொண்டிருக்க முடியாது என்பது இயல்பானதே.

இஸ்லாமிய நாட்டில் இருக்கின்ற சிறுவர்கள், பதின்பருவத்தினர் மற்றும் இளைஞர்கள் தங்களுடைய கொள்திறன் மற்றும் திறமை ஆகியவற்றை இஸ்லாமிய மற்றும் புரட்சியின் இலக்கு சார்ந்த விழுமியங்கள் எனும் உயர்வான தேசிய விழுமியங்களுக்காகச் செழிக்கச் செய்து, பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே கற்றுக்கொள்கிறார்கள்.

இந்த வாழ்வியல் கல்வியும், அதனை சாத்தியப்படுத்தும் வழிமுறையும் ஆசிரியர்கள் பொறுப்பேற்றுள்ள மிகப்பெரும் பணியாகவும், அருள்நிறைந்த புரட்சியாகவும் இருக்கின்றது.

இஸ்லாம் நன்மை பயக்கும் அறிவின்பால் அழைக்கின்றது. நன்மை பயக்கும் அறிவானது ஒருபுறம், ஒரு ஈரானிய இளைஞரை தனது நாடு மற்றும் தேசத்தினரின் அபிவிருத்திக்கும், முன்னேற்றத்திற்கும் தேவையான கருவிகளுடன் சித்தப்படுத்துகின்றது. மறுபுறம், அது அவருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி, கண்ணியம், ஆன்மீக மற்றும் மனரீதியான திடவுறுதி , தன்னம்பிக்கை ஆகியவற்றை வழங்குகின்றது.

இப்படியான பாதையில் வளர்க்கப்படும், பயிற்றுவிக்கப்படும் இளைய தலைமுறையினர் மிகப்பெரும் செல்வமாகவும், மகத்தான சேமிப்பாகவும் உள்ளனர். நாட்டிற்குரிய வேறு எந்த மதிப்புமிக்க விடயங்களும் அதற்கு சமமாக இருக்க முடியாது.

இந்தச் செல்வமே பாடசாலைகள், பல்கலைக் கழகங்கள் மற்றும் ஆன்மீகக் கலாபீடங்களில் உள்ள ஆசிரியர்களின் இலக்கு மற்றும் பணியின் விளைவாக இருக்கின்றது. இறைவனின் அருளும், கிருபையும் கடின உழைப்பாளியின் கைகளிலும், திடநோக்கு வாய்ந்த இருதயங்களிலும் இருக்கட்டும்.

அல்லாஹுவின் அருளால், நமது இளம் தலைமுறையினர் இன்றைய பௌதீக உலகில் மிகவும் அரிதாகவே கண்டுகொள்ளக் கூடியதான மிகச்சிறந்த, உயர்வான முன்மாதிரிகளைப் பெற்றுத் திகழ்கின்றார்கள். ஷஹீத் ச்சம்ரான், ஷஹீத் ஆவீனி தொடக்கம் அணுசக்தி தியாகிகள், ஷஹீத் சுலைமானி மற்றும் கும் நகர ஆன்மீகக் கலாபீடத்திலும், தெஹ்ரான் பல்கலைக் கழகத்திலும் தனது வாழ்நாளில் முப்பதுகளில் பிரகாசித்து, ஐம்பதுகளில் உயர்வான இறை ராச்சியத்திற்கு ஷஹாதத் சிறகுகளுடன் பயணித்த ஷஹீத் முதஹ்ஹரி வரைக்கும் இப்படியான முன்மாதிரிகளாக குறிப்பிட முடியும்.

தியாகிகளின் மீது அல்லாஹுவின் சாந்தியும், ஆசிரியர்களுக்கு எமது நன்றிகளும் ஈரானிய தேசத்தினரின் மகிழ்ச்சிகரமான முடிவாகத் திகழ்கின்ற இளைய தலைமுறையினருக்கு வரவேற்புகளும் உண்டாவதாக.

இமாம் செய்யித் அலீ காமினி
மே 01, 2020.

https://www.leader.ir/fa/content/24440/%D9%BE%DB%8C%D8%A7%D9%85-%D8%A8%D9%87%E2%80%8C%D9%85%D9%86%D8%A7%D8%B3%D8%A8%D8%AA-%D8%B1%D9%88%D8%B2-%D9%85%D8%B9%D9%84%D9%85

1 thought on “ஆசிரியர்களின் பெரும் பணி – உயரிய விழுமியங்களுக்கான திறன்களைச் செழிப்பாக்கும் வகையில் கற்பித்தலாகும்”

  1. மிகவும் அருமையான வாசகங்கள்

Comments are closed.

Scroll to Top
Scroll to Top