இலௌகீக அரசியலுக்கும், ஆன்மீக எழுச்சிக்கும் மத்தியில் இமாம் ஹுஸைனின் போராட்டம் 01

 

அபூ ஆஷிக் ஹுஸைன்

உலகம் தோன்றிய காலம் தொட்டே எமக்குக் கிடைக்கப்பெற்ற அனைத்து வரலாற்றுப் பதிவுகளையும் நாம் வாசிக்கும்போது, அவை ஒவ்வொன்றிலிருந்தும் தகுந்த படிப்பினைகளைப் பெற்று, அதன்படி எவ்வாறு வாழவேண்டும் என்பதைக் கற்றுக்கொள்வதே, வரலாற்றை கருத்தூண்டி வாசிப்போரின் இலக்காகும். இவ்வாறானதொரு இலக்கை கருத்திற்கொண்டே இமாம் ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கர்பலா வரலாற்றையும் நாம் அறிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

இஸ்லாம் என்பது ஒரு பரிபூரண வாழ்க்கைத் திட்டம் என்று கூறுவோரில் சிலர் ஆன்மீகத்தையும், அரசியலையும் வெவ்வேறாக்கி நோக்குவதற்கு பல முயற்சிகளை எடுத்தும் கூட, அவ்விடயத்தில் தொடர்ந்தும் தோல்வியையே தழுவி வந்திருக்கிறார்கள். வெறும் சடங்குகளோடு, வழிபாட்டுச் சட்டங்களோடு மட்டும் வரையறுத்துக்கொண்டு தனது யதார்த்தபூர்வமான ஆன்மீகப் பொருண்மையை, மானுடத்திற்குப் புரியச்செய்வதற்கு இஸ்லாம், ஒரு போதும் முயலவில்லை என்பதைப் புரிந்துகொண்டோராக அவர்கள் இருக்கவில்லை.

இஸ்லாத்தின் சட்டமூலாதாரங்களில் முதலிடம் வகிக்கும் திருக்குர்ஆன், பல்வேறு விடயங்களை படிப்பினையாகவும், எச்சரிக்கையாகவும் மனித சமுதாயத்தின் முன்னே வைத்திருக்கிறது. இவற்றுள் சில சட்டங்களாகவும், மற்றும் சில சரித்திரங்களாகவும் அமைந்துள்ளன. திருக்குர்ஆன் என்பது, தனிமனித வாழ்க்கை உட்பட, சமூகம் சார்ந்த அனைத்து விவகாரங்களையும் விளக்கிக் கூறும் ஒரு சம்பூரண வேதநூலாகும். இதனால், ‘மனிதனின் சக்திக்கு அமைவானதையே அவனுக்குக் கற்றுக்கொடுத்து, பின்னர் அதனையே அவனிடமிருந்து கடமையாக எதிர்பார்க்கும் மார்க்கமே இஸ்லாம்’ என ஒரே வரிக்குள் இதனை சுருக்கிவிடமுடியும்.

குர்ஆனிய சரித்திரங்களுக்கு ஒப்பானதோர் சரித்திரம்

திருக்குர்ஆனிலே தனித்துவமாகக் குறிப்பிடப்பட்டுள்ள சரித்திரங்களுக்கு ஒப்பாகவும், நபிகளாரின் காலத்தையடுத்து நிகழ்ந்த பாரியதொரு வரலாற்றுப் படிப்பினையாகவும் ‘கர்பலா’ காவியத்தை நாம் நோக்க வேண்டியுள்ளது. வரலாற்றுப் படிப்பினையாக அமைந்திருக்கும் இச்சரித்திரம், திருக்குர்ஆனிலே நேரடியாகக் கூறப்படவில்லை என்பதற்காக, நாம் இதனை ஒரு வரலாறாக மட்டும் வாசித்துவிட்டு, மறந்துவிட முடியாது. இதனை நீதியாகவும், நேர்மையுடனும் ஆராய்ந்து பார்ப்பதன் மூலமாக, பெருமானார் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களின் மரணத்தையடுத்து ஏற்பட்ட இதுபோன்ற பல்வேறு சம்பவங்களுக்கும், தெளிவுகளைப் பெற்றுக்கொள்வோமாயின் இஸ்லாத்திலே அரசியலும், ஆன்மீகமும் வெவ்வேறானவையா? என்பதை எம்மால் புரிந்துகொள்ள முடியும்.

இமாம் ஹுஸைன் (அலை) அவர்களின் ஆன்மீகப் போராட்டத்தின் விழுமியங்களை திசைதிருப்புவதற்கு முயற்சிக்கும் யசீதியக் கைக்கூலிகள், இன்றும் வாழ்வதை எம்மால் காணமுடிகிறது. இத்தகையோர், இமாம் ஹுஸைனின் போராட்டத்தை இலௌகீக அரசியலுக்கான போராட்டமாகவும், பதவிமோகத்தினால் நிகழ்ந்ததாகவும் விமர்சிக்கிறார்கள். மேலும், இமாம் ஹுஸைனின் ஆதரவாளர்களே, அவரை வரவழைத்து கொலை செய்ததாகவும், கர்பலாக்களத்திலே பிரசன்னத்தை கொண்டிருந்தோர் போன்று, சாட்சியம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இமாம் ஹுஸைன் (அலை), யார் என்பதை புரிந்து கொள்ளாதோருக்கு, அவரது போராட்டத்தின் யதார்த்தம் புரியாது போவதிலே ஆச்சரியம் ஏதுமில்லை. இமாம் ஹுஸைன் (அலை), ‘அஹ்லுல்பைத்’ எனும் தனித்துவமான எத்தனையோ சிறப்புகளுக்கு அப்பால், ஒரு இறைநேசருக்கும், இறைவிசுவாசிக்கும் இருக்கவேண்டிய அத்தனைப் பண்புகளையும் கொண்ட ஒரு சம்பூரண மனிதப் புனிதராகவே காணப்பட்டார். இப்படியான ஒருவர், அஹ்லுல்பைத் விரோதிகளின் வார்த்தையில் குறிப்பிடுவதைப் போல, அரசியலுக்கு ஆசைப்பட்டார் என்ற வார்த்தைகள் ஒருபோதும் அவரைக் களங்கப்படுத்திவிட முடியாது.

இஸ்லாமிய அரசியல் குறித்த ஒரு புரிதல்

ஒரு கூட்டம் யசீதையும், அவனது மூதாதையர்களையும் பாதுகாப்பதற்கான தந்திரோபாயமாகவே, அரசியலிலிருந்து வேறுபட்டதாக இஸ்லாத்தின் ஆன்மீகத்தை வரையறுத்து, இஸ்லாத்திற்குள் ‘சமயசார்பின்மை’யை புகுத்துவதற்கு முயற்சித்தது. மற்றொரு கூட்டம், ‘அரசியல் ஒரு சாக்கடை’ போன்றும், அதுவிடயத்திலே தூயோர் எப்போதும் தூரமாகவே இருந்துகொள்ள வேண்டும் என்று நல்லுபதேசம் புரிந்து, ஒருவகை ‘அரசியற்துறவு’ சிந்தனையை முஸ்லிம் சமுதாயத்திற்குள் நுழைத்துவிட்டது. இருவரும், ஏதோ ஒருவகையில் முஸ்லிம் சமூகத்தால், இமாம் ஹுஸைனுடைய போராட்டத்தின் விழுமியங்களை மிகச்சரியாகவும், முழுநிறைவாகவும் புரிந்துகொள்ள முடியாமல் போனதற்குக் காரணமாயினர்.

இஸ்லாம் தொழுகை, நோன்பு போன்ற கடமைகளோடு வரையறுக்கப்பட்ட வழிபாட்டுச் சட்டங்களை மட்டும் பேசும் மார்க்கமல்ல. அது, தனிமனித வாழ்வின் அனைத்துப் பண்பாட்டுக் கூறுகளையும் உள்ளடக்கியதாக இருப்பதோடு, சமூக தளத்திலே நீதி, நேர்மை, குற்றவியல் தண்டனைகள் போன்றவற்றையும் ‘இஸ்லாமிய அரசு’ எனும் ஒழுங்கமைப்பினூடாக பக்கச்சார்பின்றி நிறைவேற்றுவதற்கு அழைப்பு விடுக்கும் ஒரு சன்மார்க்கமாகும். இதனாலேயே இஸ்லாம் மனித உரிமைகளை உலகிற்கு அறிமுகம் செய்து, அவற்றைக் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்கள், ‘சாக்கடை அரசியல்’ வடிவமாக இருக்கும் மன்னராட்சி முறையை விரும்பவில்லை. தமது மதீனா அரசிலே, தம்மை ஒரு மன்னர்போன்று காண்பித்துக்கொண்டு ஆட்சி புரியவுமில்லை. மேலும், ஒரு சர்வாதிகாரி போன்று நடந்து கொள்ளாது, சமூக நலன்களைக் கருத்திற்கொண்டு பல்வேறு ஒப்பந்தங்களையும், உடன்படிக்கைகளையும், ஷுறா எனும் அபிப்பிராயம் கோரலையும் மேற்கொண்டதனூடாக ஒரு இஸ்லாமிய அரசியற்தலைவன் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதைப் போதித்திருந்தார். ஒரு தூய அரசை நிறுவிய பெருமை, பெருமானாரையே சாரும் என்பது மேற்கத்திய ஆய்வாளர்களுக்கே புரிந்ததோர் உண்மையாகும்.

இன்றைய காலத்தில் இஸ்லாமும், முஸ்லிம்களும் எவ்வளவு சவால்களையும், அச்சுறுத்தல்களையும் எதிர் நோக்கி வருகிறார்கள். ஏகாதிபத்திய வல்லரசுகளுக்கு முன்னிலையில் இஸ்லாமிய வல்லரசாகத் திகழவேண்டிய நாம், எதனையும் துணிந்து நிறைவேற்றுவதற்குத் தீர்மானிக்க முடியாமல் தவிக்கிறோம் என்றால், அது ஏன்? எதனால்? என்பதை சிந்திக்க வேண்டும்.

இஸ்லாமிய நாடுகளும், அரசியல் தலைவர்களும் எமது உரிமைகளை வென்று தருவதற்காக உபயோகித்த இஸ்லாமிய ‘வீட்டோபவர்’தான் என்ன? இஸ்லாமிய சட்டங்கள் அனைத்தையும் முன்னிறுத்தி நிதீயையும், நேர்மையையும் அமுல்படுத்தி ஆட்சி புரியும்; நாடு எங்கே? இஸ்லாமிய நாடுகள் அனைத்தும், அந்நியரின் கலாசார மோகத்திலும், ஆயுதமுனையிலும் சிக்குண்டு தவிக்கும் நிலையில் எப்படி அல்லாஹ்வுடைய ஆட்சியை இப்பூமியில் பரிபூரணமாகச் செயற்படுத்துவதற்கு முடியும்?. பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட மதீனாவின் இஸ்லாமிய அரசை மிகச்சரியாக பின் தொடர்ந்திருந்தால் இன்று இவ்வாறானதொரு நிலை எமக்கு ஏற்பட்டிருக்க மாட்டாது. உண்மையில் நபிகளாரின் இஸ்லாமிய அரசு, அதற்குத் தகுதியானோரின் கையில் வழங்கப்படாமல் போனதே இதற்கு முக்கிய காரணமாகும்.

எனவே, இமாம் ஹுஸைன் இதுபோன்ற போராட்டத்திற்குப் புறப்பட்டிருந்தார் என்றால் உண்மையில் அது, ஆன்மீகம் நிறைந்த இஸ்லாமிய அரசுக்கான எழுச்சிப் போராட்டம் என்றே நாம் நோக்க வேண்டியிருக்கிறது.

இலௌகீக அரசியலுக்கான போராட்டமா?

சில ஸஹாபாக்கள், இமாம் கர்பலாக்களத்திலே ஷஹீதாக்கப்படுவார் என்ற நபிகளாரின் முன்னறிவிப்புகளைச் சுட்டிக்காட்டி இமாம் ஹுஸைன் (அலை) அவர்களை அப்போராட்டத்திலிருந்து விலகிவிடுமாறு கூறி, மரணம் குறித்து எச்சரித்தனர். மேலும், அவர்கள் இது இலௌகீகம் சார்ந்தவிடயம் என்பதாகக்கூறி, அதனைக் கைவிடுவதனூடாக நபிகளாரின் குடும்பத்தினரை இவற்றிலிருந்து தூரமாகி இருக்குமாறும் எச்சரித்தனர்.

இவ்வாறு சில ஸஹாபாக்கள், இமாமுக்குக் கூறியவற்றை சுட்டிக்காட்டி, இமாமுடைய போராட்டம் இலௌகீக போராட்டமே, அதில் எவ்வித ஆன்மீக சிறப்பம்சமும் கிடையாது என்ற பிழையான வாதங்களை இன்று சிலர் முன்வைக்கிறார்கள். இவ்வரலாற்றிலே காணப்படும் யதார்த்தமே, வேறாகும். உண்மையில், இமாம் ஹுஸைனின் மீது தாம் கொண்டிருந்த பேரன்பினால், அவரை இழந்து விடக்கூடாது என்பதற்காகவே இவ்வாறு, சில ஸஹாபாக்கள் கூறியிருந்தனர்.

அதனைப் பொருட்படுத்தாது இமாம் தமது பயணத்தைத் தொடர்ந்து சென்றிருந்தார் என்றால், அத்தூய ஆன்மீக மனிதரின் இஸ்லாமிய அரசியல் குறித்த ஆழமான அறிவின்படி தமது போராட்டத்தை, முற்றிலும் ஒரு ஆன்மீகப் போராட்டமாகவே கண்டார். அதில் அணுவளவேனும், இலௌகீக ஆசை இருக்கவில்லை. அதனால்தான், தமது குடும்பத்தினரோடு அங்கு சென்றார்.

சத்தியத்தின் அளவீடு

இமாம் ஹுஸைனும், அவரைப் போன்று ஏனைய அஹ்லுல் பைத்தினரும் சத்தியத்தின் அளவீடாகவே எப்போதும் இருந்து வந்திருக்கிறார்கள். இது பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்பட்டிருந்த உண்மையாக இருக்கிறது. ‘முபாஹலா’ எனும் அசத்தியத்திலிருந்து சத்தியத்தை பிரித்தறிவதற்கான விவாத அழைப்பை, எதிர்த்தரப்பிலே இருந்த நஜ்ரான் தேசத்து கிறிஸ்துவர்களை நோக்கி விடுக்குமாறு அல்லாஹ்வின் கட்டளை இறங்கிய போது, சத்தியத்தை நிலைநாட்டுவதற்காக பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்களின் தரப்பிலே இருந்த அஹ்லுல்பைத்தினரில் இமாம் ஹுஸைனும் ஒருவர் என்பதை இவ்விடத்தில் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

அல்லாஹு தஆலா, நஜ்ரான் கிறிஸ்துவர்களின் முன்னிலையில் சத்தியத்தை நிரூபிப்பதற்கு நபியவர்களை, அவரது குடும்பத்தினரோடு இணைந்து சத்தியத்திற்கான அழைப்பை விடுக்குமாறு கட்டளையிடுகிறான். அதன்படி நபிகளார், தமது உறவுகளிலே ‘அஹ்லுல்பைத்’ எனும் குறிப்பிட்ட நபர்களை மட்டுமே தம்மோடு அழைத்துச் சென்றார். இவ்விடயத்திலே அல்லாஹு தஆலாவின் தெய்வீகக்கட்டளை இவ்வாறு அமைந்திருந்ததைக் காணலாம்.

فَمَنْ حَاجَّكَ فِيهِ مِنْ بَعْدِ مَا جَاءَكَ مِنَ الْعِلْمِ فَقُلْ تَعَالَوْا نَدْعُ أَبْنَاءَننَا وَأَبْنَاءَكُمْ وَنِسَاءَنَا وَنِسَاءَكُمْ وَأَنْفُسَنَا وَأَنْفُسَكُمْ ثُمَّ نَبْتَهِلْ فَنَجْعَلْ لَعْنَتَ اللَّهِ عَلَى الْكَاذِبِينَ

‘(நபியே!) இதுபற்றிய முழுவிபரமும் உமக்கு வந்து சேர்ந்த பின்னரும், எவரேனும் ஒருவர் உம்மிடம் இதைக் குறித்து தர்க்கம் செய்தால் ‘வாருங்கள்! எங்கள் புதல்வர்களையும், உங்கள் புதல்வர்களையும் – எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும் – எங்களையும், உங்களையும் அழைத்து (ஒன்று திரட்டிக் கொண்டு) பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று நாம் பிரார்த்திப்போம்! என நீர் கூறும்’. (ஆல இம்றான், வசனம் 61)

இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள், அப்போது சிறுவராக இருந்த நிலையிலே நபிகளாரின் குடும்ப அங்கத்தினரில் ஒருவராக அழைத்துச் செல்லப்பட்டார். மேற்படி சம்வத்தின் போது நபியவர்களையும், அவர் தம்மோடு தேர்ந்தெடுத்திருந்த அஹ்லுல்பைத்தினரையும் கண்டு, எதிரிகள் நிலைகுலைந்து, தடுமாறிப் போயினர். யார் அசத்தியவான்கள் என்ற விடயத்தில் நபிகளாருடன் சாபமிடுவதற்கு அச்சப்பட்டு, பின்வாங்கிவிட்டனர். அந்தளவு நபிகளாரையும், அவரது அஹ்லுல்பைத்தினரையும் கண்டு மிகவும் அச்சப்பட்டனர். இப்படியானோரின் எதிரிலே நாம் எதற்கும் தகுதியற்றவர்கள் என்பதைப் புரிந்துகொண்டு பின்வாங்கிவிட்டனர். இவர்கள் இறைவனோடு கொண்டுள்ள தொடர்பையும், இறைவன் இவர்களோடு கொண்டுள்ள தொடர்பையும் கருத்திற்கொண்டே நஜ்ரான் கிறிஸ்துவர்கள் புறமுதுகுகாட்டி ஓடினர்.

அஹ்லுல்பைத்தினரான இத்தகையோரின் அறிவு, ஆன்மீகம், அந்தஸ்து ஆகிய எல்லாவற்றையும் அன்றைய கிறிஸ்துவர்கள் அறிந்திருந்தார்கள். எனவே, இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள், யசீதுக்கு எதிராகப் போராடுவதற்கு எடுத்த தீர்மானம் ஒருபோதும் பிழையாகவும், அசத்தியமாகவும் இருக்க முடியாது என்பதை விளங்கிக்கொள்ள முடிகிறது.

இஸ்லாத்திற்கு எதிரான யசீதுடைய நடவடிக்கைகள், அதன் தூய்மையை மாசுபடுத்துவதாகவே அமைந்திருந்தது. ஆரம்பத்தில், இப்படியான ஆட்சிக்கு எதிர்த்து இமாம் ஹுஸைன், சமாதானத்தின் அடிப்படையில் அகிம்சைவழிப் போராட்டத்தையே முன்னெடுத்திருந்தார். ஆனால், யசீதுடைய ஆட்சியை அங்கீகரிக்கும் படியும், அவனுக்கு பைஅத் செய்யும் படியும் யசீதுடைய மிரட்டல்களும், அச்சுறுத்தல்களும் நாளுக்கு நாள் இமாமை நோக்கி வந்துகொண்டே இருந்தன. அப்போதும் கூட, மிக நிதானமாகவே தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்தார். இருந்தும், யசீதுடைய மிரட்டலும், அச்சுறுத்தலும் உச்ச நிலையை அடைந்தபோதுதான் இமாம் ஹுஸைன், அல்லாஹுவின் கட்டளையின் படியும், நபிகளாரின் வழிகாட்டலின் படியும் தாம் ஒரு அஹ்லுல்பைத் அங்கத்தவர் என்பதால் தமக்கிருந்த இஸ்லாமியக் கடமையை உணர்ந்துகொண்டு, யசீதுடைய ஆட்சிக்கு எதிராக தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியவராக, கூஃபா நோக்கிப் புறப்பட்டார்.
யசீதுடைய நேர்மையற்ற ஆட்சியை விரும்பாத இமாமவர்கள், தம்முடைய எதிர்ப்பை அகிம்சைவழியே வெளிப்படுத்தி, நேர்மையான இஸ்லாமிய அரசை உருவாக்க முயற்சித்தார். அதற்காகவே, ஒரு யுத்தத்திற்குரிய படையணியைத் திரட்டுவதற்கு பதிலாக, தமது இனபந்துக்களை இணைத்துக்கொண்டு ஒரு சாத்வீகப் போராட்டத்தை தொடங்கியதன் மூலமாக யசீதுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

உண்மையில், மேலே நஜ்ரான் கிறிஸ்துவர்களின் விடயத்தில் நிகழ்ந்ததைப் போன்று, அதாவது, சத்தியவானாக இருந்த இமாம் ஹுஸைனுக்கு முன்னால் அவர்கள் பின்வாங்கிச் சென்றதைப் போன்று, யசீதும், அவனது கூலிகளும் இமாம் சத்தியத்தில் இருப்பதைப் புரிந்து கொண்டு பின்வாங்கிச் சென்றிருக்க வேண்டும். அஹ்லுல்பைத்திற்கு எதிராக நிற்றல் என்பது, சத்தியத்திற்கு எதிராக நிற்பதேயாகும். இதைதான் யசீதும் இமாமுடைய விடயத்தில் செய்திருக்கிறான் என்பதை நன்றாக விளங்கிக்கொள்ள முடிகிறது.

நஜ்ரான் கிறிஸ்துவப் பாதிரிகள் புரிந்திருந்தளவுக்குக் கூட யசீதும், யசீதுடைய கூலிப்படைகளும் நபிகளாரையும், அவரது அஹ்லுல்பைத்தினரையும், அவர்களின் தூய்மையையும், அந்தஸ்தையும் புரிந்துகொள்ளத் தவறிவிட்டனர். அல்லது, அவ்வாறு புரிந்து கொண்டிருந்தாலும் கூட, இலௌகீக ஆசைகளின் காரணமாக அதனை அலட்சியப் படுத்திவிட்டு, நபிகளாரின் சத்திய குடும்பத்தாருக்கு அநியாயம் செய்திருக்கின்றனர். இவ்வாறுதான் இமாம் ஹுஸைன் அவர்களின் போராட்டத்தின் யதார்த்தபூர்வத் தன்மையை விளங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. மாறாக, இமாமவர்கள் தமக்கிருந்த ஆட்சிப் பேராசையினால் யசீதுக்கு எதிராகப் போராடுவதற்கு குடும்பத்தோடு சென்று, அங்கு தம்மையும், தம் உறவுகளையும் பலிகொடுக்கவில்லை.

நஜ்ரான் கிறிஸ்துவர்களின் விடயத்தில் பெருமானார் (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்று யசீதுடைய விடயத்திலும் இமாம் ஹுஸைன் நடந்துகொள்ளப் பார்த்தார். இதன் மூலம் அஹ்லுல்பைத் வழிவந்த தமது குழந்தைகள், பெண்கள் ஆகியோரின் சிறப்புகளைக் கருத்திற் கொண்டாவது யசீதும், அவனது கூலிகளும் நேர்மையாகவும், நீதியாகவும் நடந்து கொள்ளக்கூடும், உண்மையான இஸ்லாமிய ஆட்சிக்கு வழிவகுக்கக்கூடும் என்பதாகவே இமாம் எதிர்பார்த்திருந்தார். சத்தியத்தின்பால் அழைக்கின்ற ‘முபாஹலா’வின் விடயத்திலே தமக்கிருந்த முன்னனுபவத்தின் அடிப்படையில்தான் இவ்வாறான ஒரு எதிர்பார்ப்பை யசீதுடைய விடயத்திலும் இமாம் கொண்டிருந்தார். ஆனால், யசீதோ சத்தியத்தின் முன்னால் கட்டுப்படுகின்ற உயர்வான பண்பைக் கொண்டவனல்ல என்பதையும், தனது மனோயிச்சையைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக சத்தியத்தையே அழித்துவிடுபவன் என்பதையும் கர்பலாப் போராட்டத்திலே புலப்படுத்திவிட்டான். எனவே, இமாம் ஹுஸைன் (அலை) அவர்களுடைய இப்போராட்டம் இலௌகீக அரசியலுக்கான போராட்டமல்ல என்பதை இதிலிருந்தே புரிந்துகொள்ள முடிகிறது.

Scroll to Top
Scroll to Top