ஆயதுல்லாஹ் மிஸ்பாஹ் யஸ்தி (ரஹ்)

Ayatullah Misbah Yazdi (Rah) – Biography

காலஞ்சென்ற ஆயதுல்லாஹ் முஹம்மத் தகி மிஸ்பாஹ் யஸ்தி (கி.பி. 1935-2021) அவர்கள் ஒரு முஜ்தஹிதாகவும், சமகால ஈரானிய இஸ்லாமியத் தத்துவவாதியாகவும், குர்ஆனிய விரிவுரையாளராகவும், கும் நகர ஆன்மீக கலாபீட பேராசிரியராகவும் திகழ்ந்தார்.

இமாம் கொமெய்னி கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராகவும், ஈரானின் தலைமைபீட நிபுணர்கள் கவுன்சிலின் உறுப்பினராகவும், கலாச்சாரப் புரட்சியின் உச்ச கவுன்சிலின் உறுப்பினராகவும், அவ்வாறே கும் ஆன்மீக கலாபீட ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினராகவும், தலைவராகவும் இருந்துள்ளார்.

மேலும், அஹ்லுல் பைத் உலகப் பேரவையினுடைய மேற்சபையின் தலைவராகப் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆயதுல்லாஹ் முஹம்மது தகி மிஸ்பாஹ் யஸ்தி (ரஹ்) அவர்கள் 1934ம் ஆண்டில் ஈரானின் யஸ்த் நகரில் பிறந்தார்.

இவரது முதன்மை ஆசிரியர்களாக ஆயதுல்லாஹ் புரூஜர்தி, இமாம் கொமெய்னி, அல்லாமா தபாதபாயி மற்றும் ஆயதுல்லாஹ் பஹ்ஜத் ஆகியோர் காணப்படுகின்றனர்.

ஆயதுல்லாஹ் மிஸ்பாஹ் யஸ்தி (ரஹ்) அவர்கள் கும் நகரில், 1952 முதல் 1960 வரை, இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் போதித்துவந்த வகுப்புகளில் பங்கேற்றிருந்தார். அதே நேரம், அவர் திருக்குர்ஆன் விரிவுரை, இப்னு சீனா மற்றும் முல்லா சத்ரா ஆகியோரின் இஸ்லாமிய மெய்யியல்கள் ஆகிவற்றை அல்லாமா முஹம்மது ஹுசைன் தபாதபாயி (ரஹ்) அவர்களிடத்தில் கற்றுக்கொண்டார்.

ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளாக மெய்ஞ்ஞான மேதை ஆயதுல்லாஹ் பஹ்ஜத் (ரஹ்) அவர்களின் இஸ்லாமியச் சட்டக்கலைக் கருத்தரங்குகளிலும் கலந்து கொண்டார்.

ஆயதுல்லாஹ் மிஸ்பாஹ் யஸ்தி (ரஹ்) அவர்கள் கொண்டிருந்த சமூக – அரசியல் விவகாரங்களின் பாலான ஈடுபாடு, ஊழல் நிறைந்த பஹ்லவி ஆட்சிக்கு எதிரான இஸ்லாமிய எழுச்சியில் அவர் தீவிரமாக பங்கேற்ற காலத்திலிருந்தே தொடங்கிவிட்டது.

இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் நாடுகடத்தப்பட்டபோது, ஆயதுல்லாஹ் ஷஹீத் பெஹெஷ்தி (ரஹ்) உட்பட இமாமின் வேறு சில மாணவர்களுடன் இஸ்லாமிய எழுச்சிப் போராட்டம் மற்றும் இஸ்லாமிய அரசியல் முறைமை போன்ற சமூக விவகாரங்கள் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டங்கள் குறித்து விவாதங்களைத் தொடங்கியிருந்தார்.

ஆயதுல்லாஹ் ஷஹீத் பெஹெஷ்தி, ஆயத்துல்லாஹ் அஹ்மத் ஜன்னதி மற்றும் ஆயத்துல்லாஹ் அலி குத்தூஸி ஆகியோர்களோடு, ‘ஹக்கானி’ ஆன்மீக கலாபீடத்தின் இயக்குநர் குழுவில் ஆயதுல்லாஹ் மிஸ்பாஹ் யஸ்தி (ரஹ்) அவர்களும் அங்கம் வகித்திருந்தார். அங்கு சுமார் பத்து ஆண்டுகளாக திருக்குர்ஆன் கற்கைகள், தத்துவம் மற்றும் அறவியல் ஆகியவற்றைப் போதித்துவந்தார்.

1975ஆம் ஆண்டு முதல், ‘தர் ராஹே ஹக்’ நிறுவனத்தின் கல்விப் பிரிவு, ‘பாகிருல் உலூம்’ கலாச்சார மன்றம், ‘தப்தரே ஹம்காரியே ஹவ்ஸா வா தானஷ்கா’ எனும் ஆன்மீகக் கலாபீடம் மற்றும் பல்கலைக்கழகம் இடையிலான ஒத்துழைப்பு அலுவலகம் போன்ற பல்வேறு கல்வி நிறுவனங்களை ஆயதுல்லாஹ் மிஸ்பாஹ் யஸ்தி (ரஹ்) அவர்கள் நிறுவி, இயக்கியதோடு, அவற்றில் கற்பித்தும் வந்தார்.

ஆயதுல்லாஹ் அவர்கள் அண்மைய ஆண்டுகளில் கும் நகரிலுள்ள ‘இமாம் கொமெய்னி’ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக பணியாற்றியிருந்தார். 1990ம் ஆண்டு குஸிஸ்தான் மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ‘மஜ்லிஸே கிப்ரகானே ரஹ்பரி’ எனும் தலைமைபீட நிபுணர்கள் கவுன்சிலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, அடுத்த சுற்றில் தெஹ்ரானைப் பிரதிநிதித்துவப்படுத்தி மீண்டும் அக்கவுன்சிலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆயதுல்லாஹ் மிஸ்பாஹ் யஸ்தி (ரஹ்) அவர்கள் இஸ்லாமிய மற்றும் ஒப்பீட்டு தத்துவம், இறையியல், அறவியல், குர்ஆனிய விரிவுரை, இஸ்லாமிய தத்துவம் மற்றும் இஸ்லாமியக் கோட்பாடுகள் போன்ற இஸ்லாமிய துறைகள் குறித்து பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். அவரது படைப்புகளில் ‘ஆமூஸஷே ஃபல்சஃபா’ எனும் மெய்யியல் கற்கை, ‘அக்லாக் தர் குர்ஆன்’ எனும் திருக்குர்ஆனில் ஒழுக்கநெறிகள் மற்றும் ‘நஸரியயே சியாசியே இஸ்லாம்’ எனும் இஸ்லாமிய அரசியல் கோட்பாடு ஆகிய நூற்கள் முதன்மையானவை ஆகும்.

இறுதியாக, ஆயதுல்லாஹ் மிஸ்பாஹ் யஸ்தி (ரஹ்) அவர்கள் 2021 ஜனவரி 1ம் நாள் வெள்ளிக்கிழமை மாலை தனது 86வது வயதில் காலமானார். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.

Scroll to Top
Scroll to Top