பெண்களின் ‘மானுட கௌரவத்திற்கு’ இஸ்லாம் வழங்கும் முக்கியத்துவம்

Islam’s emphasis on the ‘human dignity’ of women
பேராசிரியை இஸ்மத் பனாஹியான்

 

கற்பொழுக்கமும், ஹிஜாபும் பற்றிய விடயங்களில் விழிப்புணர்வூட்டலும், கலாச்சார உருவாக்கலும் அவசியம் மேற்கொள்ளப்பட வேண்டும். கற்பொழுக்கம் மற்றும் ஹிஜாப் சார்ந்த கலாச்சாரத்தை ஊக்குவிப்பதில், ஆணையும், பெண்ணையும் சமமாகக் கருத்திற்கொள்கின்ற மானுட இருப்பை பிரதிபளிக்கும் மதிப்புமிகுந்த பரிமாணங்கள் நம்மால் முன்வைக்கப்பட வேண்டும். கற்பொழுக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட பாலினத்திற்கு மாத்திரம் உரியதல்ல.

பெண்களின் சுயஅடையாளத்தை மதிப்பதற்கும், பெண்களுக்கான பொறுப்பை அறியச் செய்வதற்குமான ஆய்வுப் பரப்பில் மேற்கொள்ளப்படும் ஒரு ஆய்வுதான் கற்பொழுக்கமும், ஹிஜாபும் பற்றிய விவாதமாகும். இஸ்லாமிய சன்மார்க்கம் ஹிஜாபின் மூலமாக பெண்களை சமுதாயப் புறக்கணிப்பிலும், கட்டுக்கோப்பான வரம்புகளிலும் வைக்கிறது என்ற சமூகத்தின் பார்வையும், கருத்தும் முற்றிலும் தவறானதும், மேம்போக்கானதுமாகும்.

இஸ்லாம் இவ்விடயத்தில் முன்வைக்கும் ஆன்மீக மற்றும் ஏகத்துவக் கண்ணோட்டத்தை ஒருவர் விளங்கிக்கொண்டு, ஏகத்துவம் சார்ந்த நோக்குநிலையைக் கருத்தில் கொள்வாராயின் கற்பொழுக்கத்துக்கும், ஹிஜாபுக்கும் இஸ்லாம் வழங்கியுள்ள உயரிய நிலையைப் புரிந்துகொள்வார்.

இங்கே ஏகத்துவம் என்பது விரிவான மற்றும் நுணுக்கமான அர்த்தத்தில் எடுத்தாளப்படுகிறது. இறைவன், பிரபஞ்சம் மற்றும் மனிதன் ஆகியவற்றுக்கு இடையிலான இருத்தலியல் சார்ந்த ஏகத்துவக் கண்ணோட்டமானது ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவான மானுட இருப்பின் மதிப்பையே வழங்குகிறது. இவ்வாறான ஏகத்துவ இருத்தலியல் பார்வையில் பாலின வேறுபாட்டினால் பெண் ஆணைவிடவும் தாழ்ந்த நிலைக்கு ஒருபோதும் தள்ளப்படுவது கிடையாது. ஆணுக்கு நிகரான மானுட இருப்பின் மதிப்பையே பெண்ணும் பெற்றிருக்கிறாள்.

இவ்விடயத்தில் இறைத்தூதர் (ஸல்) மற்றும் பரிசுத்த இமாம்களின் நோக்குநிலை ஒரு தூய ஏகத்துவ நோக்குநிலையாகும். இந்த நோக்குநிலையில், அவர்கள் பெண்களுக்கு வகுத்திருக்கும் வரையறையும், அந்தஸ்தும் ஒரு கோணத்தில் ஆண்களுக்கும் பொதுவானதாகப் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. ஆணும், பெண்ணும் மனிதர் என்ற வகையில் மிகவும் உயர்வான அந்தஸ்தை, இடத்தைப் பெற்றிருக்கிறார்கள் என்ற மானுட இருப்பின் மதிப்பை அறியச் செய்வதாக அது அமைகிறது. உண்மையில், ஆண்-பெண் இருபாலாரினதும் மானுட அந்தஸ்திற்கு விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையிலான வேறுபாடுகளில், பாலின வேறுபாடுகளை நம்மால் குறிப்பிட முடிந்தாலும், அவை அவர்களுக்குரிய பொறுப்புகளையும், கடமைகளையும் வரையறுக்கிற வேறுபாடுகளாக அமைகின்றன. அவ்வாறே, எதிர்கால ஏகத்துவ சந்ததி மற்றும் மானுட சமுதாயத்திற்கு முன்னே பெண்கள் கொண்டுள்ள விசேட பொறுப்புகளை, கடமைகளை வரையறுக்கின்றன. இதனால்தான், இறைவன் பாலின விடயத்தில் ஆண், பெண் இருபாலாருக்கும் இடையில் வேறுபாடுகளை வகுத்து வைத்துள்ளான்.

மானுட இருப்பின் மதிப்பையும், அவ்வாறே பாலின வேறுபாடு சார்ந்த விசேட தன்மைகளையும் அறியும் கோணத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் இருக்கும் ஒற்றுமையைக் கருத்திற்கொள்வதனூடாக சமுதாயத்தில் பெண்ணுக்குரிய உண்மையான அந்தஸ்தை அறிந்துகொள்ள முடியும்.

இதனால், கற்பொழுக்கமும், ஹிஜாபும் பற்றிய விடயத்தில் விழிப்புணர்வூட்டலும், கலாச்சார உருவாக்கலும் அவசியம் மேற்கொள்ளப்பட வேண்டும். பெண்ணுக்கு இஸ்லாமிய சன்மார்க்கம் வழங்கியுள்ள கண்ணியமும், மகத்துவமும் நிரம்பிய சுயஅடையாளத்தை அறிவதனூடாக இஸ்லாமிய கண்ணோட்டத்தில் ஆண்களை விடவும் பெண்களின் நிலை மிகவும் உயர்ந்தது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். எனவே, இப்படியான புரிதல் சமூகத்தின் கவனத்திற்கு அவசியம் கொண்டு செல்லப்பட வேண்டும்.

புனித திருக்குர்ஆனில், அல்லாஹு தஆலா பெண்களுக்கு மட்டுமே ‘முஹ்சனாத்’ (محصنات) என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளான். அதேநேரம், முஹ்சினீன் என்ற வார்த்தை ஆண்களுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வார்த்தையின் பெண்பால் பதம் முஹ்சினாத் என்பதாகும். திருக்குர்ஆனில் முஹ்’சி’னாத் என்ற பதம் பயன்படுத்தப்படாமல் முஹ்’ச’னாத் என்ற பதமே பெண்களுக்கு பயன்படுத்தட்டிருப்பதைக் கவனத்திற்கொள்ள வேண்டும். முஹ்சனாத் என்ற இந்த வார்த்தை, ‘கோட்டை’ அல்லது ‘அரண்’ என்று பொருள்படும் ‘ஹிஸ்ன்’ என்ற சொல்லின் வேரிலிருந்து வந்தது. பல்வேறு ஹதீஸ்களில் அல்லாஹு தஆலா, ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்ற கலிமாவை தனது கோட்டையும், அரணுமாகக் கூறியிருப்பதைப் பார்க்கிறோம். என்றாலும் இங்கே, கணவனைத் தேர்வு செய்ய ஒப்புக்கொண்ட பெண்களின் விஷயத்தில் ‘கோட்டையில் குடியிருப்போர்’ என்ற பொருளில் ‘முஹ்சனாத்’ என்ற வார்த்தையை பெண்களுக்குப் பயன்படுத்தியுள்ளதைக் காணலாம்.

திருமணமானவள் அல்லது கற்பொழுக்கம் உடையவள் என்ற பொருளில் மொழிபெயர்க்கப்படுகின்ற ‘முஹ்சனாத்’ என்ற வார்த்தையின் பொருள், அதன் மூலச்சொல்லைக் கருத்திற்கொள்ளும்போது ‘கோட்டையில் குடியிருப்போர்’ அதாவது ‘அரணால் காக்கப்படுவோர்’ என்பதாகும். எனவே, முஹ்சனாத் என்று அழைத்ததன் மூலமாக பெண்கள் தன்னுடைய பாதுகாப்பில் இருப்போர் என்பதாக இறைவன் அறிமுகம் செய்கிறான்.

அல்லாஹு தஆலா, கணவனுடன் வாழ்கின்ற கற்பொழுக்கமுள்ள பெண்களை தனது பாதுகாப்பில் இருப்போராக அறிமுகம் செய்கிறான். ஏனென்றால், பெண்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பாரிய தெய்வீக செல்வத்தை, மூலதனத்தை ஒரு ஆணுடன் பகிர்ந்துகொள்ள ஒப்புக்கொள்கிறார்கள்.

திருக்குர்ஆன் வசனங்களில் அல்லாஹு தஆலா, மனிதகுலத்திற்கு முன்மாதிரியாக சிறப்பு வாய்ந்த பெண்களை அறிமுகப்படுத்துகிறான் என்று ஆன்மீகத் தலைவர் இமாம் செய்யித் அலீ காமெனயீ அவர்கள் கூறியுள்ளார்கள். இக்கூற்றைக் கருத்திற்கொள்ளும்போது, இறைவன் பெண்களை பெண்களுக்கு மட்டும் முன்மாதிரியாக முன்வைக்காது, முழு மனிதகுலத்திற்கும் முன்மாதிரியாக அறிமுகம் செய்திருக்கிறான். இது இஸ்லாமிய சன்மார்க்கத்தில் பெண்களின் மிகவும் உயர்வான, மதிப்பு வாய்ந்த அந்தஸ்தை, நிலையை எடுத்துக் காட்டுகிறது.

திருக்குர்ஆனில் வந்துள்ள செய்தியில், ஹஸ்ரத் பல்கீஸ் அம்மையார் ஒரு ஆட்சியாளராக இருந்த போதிலும், பல வசதிவாய்ப்புகளை, அதிகாரங்களைக் கொண்டிருந்த போதிலும், ஹஸ்ரத் சுலைமான் (அலை) எனும் இறைவனின் தூதரிடமிருந்து ஒரு அழைப்பு மடலைப் பெற்றுக்கொண்டபோது, அவர் மனிதநேயக் கண்ணோட்டத்தில் அதனைப் பார்த்ததோடு, சங்கைமிகுந்த மடல் என்றும் அதனைக் கூறினார்.

திருக்குர்ஆனில் வந்துள்ள இவ்விடயம் எதனை எடுத்துக்காட்டுகிறது என்றால், ஒரு பெண்ணின் பார்வை, சிந்தனை மற்றும் அணுகுமுறை ஆகியவற்றை பாலின வேறுபாடின்றி ‘மனிதன்’ என்ற கோணத்தில்தான் இறைவன் எடுத்துக்காட்டுகிறான். அதேநேரம், பலர் அதிகாரத்தை அடைந்து, பதவியும் புகழும் கிடைத்துவிட்டால், சிந்தனையும், பகுத்தறிவும் பலவீனமடைந்து தங்களுடைய மனிதத்தன்மையை இழந்து விடுகிறார்கள் என்ற நிலையில், ஹஸ்ரத் பல்கீஸ் அம்மையார் தன்னுடைய மனிதத்தன்மையை ஒரு போதும் இழந்துவிடவில்லை என்பதை இறைவன் குறிப்பிடுகிறான்.

ஏகத்துவத்தின் பார்வையில், ஆண்களை விடவும் பெண்களுக்கு அதிக சிறப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் பெண்களை ‘நெருக்கம்’ (قرب) என்ற வார்த்தையினால் குறிப்பிடும் திருக்குர்ஆனின் வசனங்களை நம்மால் சுட்டிக்காட்ட முடியும். என்றாலும், ‘நெருக்கம்’ என்ற வார்த்தை மிகவும் குறைவாகவே, அதிலும் பெண்களுக்கு மாத்திரமே திருக்குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஈரானில் அனுஷ்டிக்கப்படும் கற்பொழுக்கம் மற்றும் ஹிஜாப் வாரமானது அறிவார்ந்த, அறிவுசார்ந்த துணைச்சான்றுகளைக் கொண்ட சுயஅடையாளமாக கற்பொழுக்கத்தையும், ஹிஜாபையும் முன்வைப்பதற்கு எமக்கு கிடைத்திருக்கும் ஒரு சந்தர்ப்பமாகும். இது கற்பொழுக்கம் மற்றும் ஹிஜாப் ஆகியவற்றின் கண்ணியத்தை அறியச் செய்வதற்கு வரையறுக்கப்பட்ட ஒரு காலப்பகுதி என்று மட்டும் நாம் இதனைப் போதுமாக்கிக் கொள்ளக் கூடாது. மாறாக, எல்லாக் காலங்களிலும் இப்பணியை நாம் மேற்கொள்ள வேண்டும்.

பெண்களுக்கான ஹிஜாப் மற்றும் கற்பொழுக்கத்தின் மேன்மை என்னவென்றால், அவர்கள் தங்கள் உடலை ஆணுக்குரிய ஒரு அமானிதம் என்று மட்டும் கருதுவதற்கு அப்பால், தமது உடலை விடவும் தங்களின் கௌரவம் மேலானது எனவும், கற்பு ஒரு தெய்வீக அமானிதம் எனவும் கருதுவதாகும்.

இஸ்லாமிய சன்மார்க்கத்தில் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் கற்பொழுக்கத்தையும், ஹிஜாபையையும் கடைபிடிக்க வேண்டியது அவசியம். ஆண்-பெண் இருபாலரும் சமூகத்தில் நுழையும் போது, அவர்கள் மனிதர்களாகவும், மனிதநேய அந்தஸ்திலும் சமூகத்தில் பிரசன்னம் கொடுக்க வேண்டும். மேலும், அவர்களின் பாலின தோற்றமும், வெளிப்பாடுகளும் மறைக்கப்பட வேண்டும். சமூகம் என்னுடன் பேசுகிறது, என் உடலுடன் அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தவகையில், ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரு பொதுவான முக்கிய அம்சமாக இது இருக்கிறது.

துரதிர்ஷ்டவசமாக, சமீப ஆண்டுகளில், இளைஞர்களிடையே பாலின வேறுபாட்டின் வெளிப்பாட்டுச் சூழல் பரவியிருப்பதைக் காண்கிறோம். வளர்ந்த ஆண்களும் வெளிப்புற அழகைக் காட்டுவதில் ஒருவருக்கொருவர் போட்டியிட்டுக் கொள்கிறார்கள். ‘உண்மையான நான்’ என்ற யதார்த்தத்தை மறைத்துவிட்டு உடலானது அதிக மதிப்பை பெற்றுக்கொண்டுள்ளது. ‘உண்மையான நான்’ என்பதில்தான் தெய்வீக இயல்பு அமைந்துள்ளது. எனவே, இந்த தெய்வீக இயல்பு வெளிப்புற அழகுகளின் பின்னால் மறைந்து, இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

கற்பொழுக்கத்தையும், ஹிஜாப் கலாச்சாரத்தையும் ஊக்குவிப்பதில், மானுட இருப்பின் மதிப்பில் நின்றுமான பரிமாணங்கள் நம்மால் முன்வைக்கப்பட வேண்டியது அவசியம். இதில் ஆண்களும் பெண்களும் சமமாகப் பார்க்கப்பட முடியும். இந்த மானுட இருப்பின் மதிப்பு, ஒரு குறிப்பிட்ட பாலினத்திற்கு மட்டும் உரியதல்ல.

தனக்கான மானுட கௌரவத்தை மதிக்கும் ஒவ்வொரு நபரும், மற்றவர்களின் மானுட கௌரவத்தையும் மதிப்பார்கள். இந்தளவு வளர்ச்சியையும், சிறப்பையும் எய்திய ஒருவர், ஏனைய மனிதர்களை அவர்களின் மனித அந்தஸ்து மற்றும் மனித அடையாளம் எனும் நோக்குநிலையிலிருந்துதான் எப்போதும் அணுகுவார் என்பதில் ஐயமில்லை.

Scroll to Top
Scroll to Top