ஏன் நாம் ஷீஆ இஸ்லாத்தை ஆதரிக்கின்றோம்?

1. இறுதி மார்க்கம் இஸ்லாம்; என்பதால் இது மனிதனின் சகல தேவைகளையும், உணர்வுகளையும் கவனத்திற்கொண்டு அமையப்பெற்றது என்றும், மனிதனின் எப்பிரச்சினைக்கும் இதில் தீர்வு இருக்கிறது என்றும், எக்காலத்திற்கும் இது பொருத்தமானது என்றும் நாம் நம்பினோம். இஸ்லாம் ஆன்மீகம், அரசியல், பொருளியல், கலை இலக்கியம், ஒழுக்கம் பண்பாடு… என சகல விடயங்களையும் மிக உன்னத நிலையில் கொண்ட ஒரு மார்க்கம் என்றே நாம் அறிந்திருந்தோம். எனினும், அவற்றை முறையான வாசிப்பு மற்றும் புரிதல் மூலம் வெளிக்கொணர்வது, இஸ்லாமிய அறிஞர்களின் திறமையில் தங்கியுள்ளது என்பதால் இஸ்லாத்தின் எந்த உட்பிரிவைச் சேர்ந்த அறிஞர்கள் இஸ்லாத்தை சரியாக விளங்கி அதன் சிறந்த அரசியல், ஆன்மீகம், பொருளாதாரம், கலை கலாசாரம், பண்பாடு, ஒழுக்கவியல், தலைமைத்துவம் போன்ற இன்னோரன்ன விடயங்களில் மிகச்சிறந்த மற்றும் நடைமுறைக்குச் சாத்தியமான, எடுத்துக்காட்டான கருத்தியலை முன்வைத்து, அதனை (நாவில் மாத்திரமில்லாமல்) செயலிலும் செய்து காட்டுகிறார்களோ அவர்களின் சிந்தனை முகாமில் நாம் இருக்கவே ஆசைப்பட்டோம். அத்தனையோரைப் பின்பற்றவே விரும்பினோம்.

அத்தகைய முன்மாதிரி இஸ்லாத்தை சவுதி ஆலிம்களாலோ அல்லது எகிப்திய இக்வான்களாலோ அல்லது துருக்கி, பாகிஸ்தானிய அறிஞர்களாலோ முன்வைக்க முடியாமலிருந்த தருணத்தில் ஷீஆ சிந்தனைப் பிரிவானது குறித்த விடயங்களில் முன்வைத்த இஸ்லாமிய கருத்தியலை மிகச் சிறந்ததாகவும், நடைமுறைக்குச் சாத்தியமானதாகவும் நாம் கண்டோம். ஷீஆ சிந்தனைப் பிரிவினர் இவ்விடயங்களில் சொல் வீரர்களாக மாத்திரம் இல்லாமல், செயல் வீரர்களாக இருந்ததையும் நாம் கண்டோம்.

இஸ்லாம் என்பது பள்ளிவாயலுடனும், தொழுகையுடனும் மாத்திரம் வரையறுக்கப்பட்ட மார்க்கமல்ல. இஸ்லாமியத் தலைமைத்துவம், இஸ்லாமிய ஆட்சி, இஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் தொழிநுட்ப வளர்ச்சிகளும், கலை கலாசார விழுமியங்களும் இஸ்லாமிய உம்மத்தின் பிரிக்க முடியாத அங்கங்களாகும். நாம் பின்பற்ற விரும்பும் நடைமுறைக்குச் சாத்தியமான சமகாலத்திற்கேற்ற இஸ்லாத்தை நாம் எகிப்திலும் காணவில்லை, சவூதியிலும் காணவில்லை, துருக்கியிலும் காணவில்லை. இதனை நாம் ஈரான் இஸ்லாமியக் குடியரசைத்தவிர வேறு எந்த இடத்திலும் காணவில்லை. இதனால் நாம் ஷீஆ இஸ்லாத்தை ஒரு முன்மாதிரி சிந்தனைப் பிரிவாகப் பார்க்கிறோம். ஈரானின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் அவர்கள் பின்பற்றும் மார்க்க சிந்தனைகளே மூலக்காரணியாக இருக்கின்றது என்பதை நாம் தெளிவாக அறிகிறோம். இஸ்லாமிய ஆட்சி என்று வெறும் கோஷத்தில் மாத்திரமே எகிப்திய இக்வான்களும், ஜமாஅதே இஸ்லாமியினரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

ஷரீஆ சட்டத்தை அரபிகள் அல்லாத அஜமி ஏழைப் பணிப்பெண்களின் கழுத்தை வெட்டும் விடயத்தில் நடைமுறைப்படுத்தி மதுவிலும் மாதுவிலும் மயங்கி, மன்னராட்சி புரிவதிலே மட்டும் அரபு நாடுகள் முன்மாதிரியாகத் திகழ்கின்றன. இறைநிராகரிப்பாளர்களை தமது பாதுகாவலர்களாக ஆக்கிக்கொண்டு அவர்களின் அடிமைகளாகத் திகழும் இவர்களால் இஸ்லாமிய உம்மத்தை வழிநடாத்த முடியாது என்பது வெள்ளிடைமலை. ஆகவே சிறந்த, நடைமுறைக்குச் சாத்தியமான இஸ்லாமியக் கருத்தியல், பலமான இஸ்லாமியத் தலைமைத்துவம், இஸ்லாமிய அரசியல்முறைமை, இஸ்லாமியப் பொருளாதாரம், இஸ்லாமியக் கலை, இஸ்லாமிய சினிமா, இஸ்லாமிய நாகரீகம், இஸ்லாமிய ஒழுக்கவியல், இஸ்லாமிய ஆன்மீகம் போன்றவற்றில் எடுத்துக்காட்டாக செயற்படுவோரை நாம் பின்தொடரவே ஆசைப்படுகிறோம். மேற்குறித்த விடயங்களில் ஷீஆக்களை விடவும் மிகச்சிறந்த ஒன்றை வேறு எந்தப் பிரிவினர் முன்வைத்தாலும், நாம் அதனை ஏற்றுப் பின்பற்றும் திறந்த மனநிலையிலே உள்ளோம்.

மேலும் எமது சிந்தனை ரீதியான கேள்விகளுக்கு மிகச்சிறந்த பதில்கள் ஷீஆ இஸ்லாத்தில் இருக்கிறது. குறித்த விடயங்களில் ஷீஆ இஸ்லாமிய அறிஞர்கள் சிறந்து விளங்குவதால் அவர்களை நாம் சரிகாண்கிறோம்.

2. ஷீஆக்களை முஸ்லிம்கள் என்றும், அவர்களின் மத்ஹபு இஸ்லாமிய மத்ஹபுகளில் ஒன்று என்றும், அதனைப் பின்பற்றுவதில் தவறேதுமில்லை என்றும் இஸ்லாமிய உலகின் மூத்த மற்றும் தலை சிறந்த மார்க்க அறிஞர்களும், முஃப்திகளும் பத்வா வழங்கியிருப்பதும் கூட நாம், ஷீஆ இஸ்லாத்தை சரிகாண்பதற்கு மற்றொரு காரணமாகும். அஹ்லுஸ் சுன்னா உலகில் ஃபத்வா கொடுக்கும் அதிகாரத்தையும், தகைமையையும் கொண்ட பிரதான மையமான எகிப்து அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் முஃப்திகள், இத்தகைய ஃபத்வாக்களை ஒன்று இரண்டு தடவைகளல்ல பல தடவைகள் வழங்கியிருக்கிறார்கள். இப்போதும் கூட, வழங்கிக் கொண்டே இருக்கின்றனர். இதனால், நாம் ஷீஆ இஸ்லாத்தை ஆதரிப்பதில் மார்க்க ரீதியான எத்தவறுமில்லை என்பதாக நம்புகிறோம்.

3. இதர இஸ்லாமிய அமைப்புக்களை விட ஷீஆ முஸ்லிம்கள் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை மிகவும் மதிக்கிறார்கள். பிறப்பு முதல் இறப்பு வரை அவர்களை பாவம், தவறு செய்யாத பரிசுத்தவான் என்றே நம்பிக்கை கொள்கிறார்கள். சகல வேளைகளிலும் அவர்கள் மீது ஸலவாத்துக்கூறி கண்ணியப்படுத்துகிறார்கள். அவர்களின் சுன்னாவை அச்சொட்டாகப் பின்பற்றுகிறார்கள். மேலும், புனித திருக்குர்ஆனை வெறுமனே மனனமிட்டுக் பாதுகாக்காமால் அதன் கட்டளைகளையும் செயற்படுத்துகிறார்கள். அதற்குரிய சங்கையையும், மரியாதையையும் கொடுக்கும் அதேநேரத்தில் புதிய, நவீன கண்டுபிடிப்புகளுக்கு திருக்குர்ஆனையே மூலமாகக் கொள்கிறார்கள். திருக்குர்ஆனிய வாழ்க்கைத் திட்டம் அவர்களின் வாழ்க்கையில் பின்னிப் பிணைந்திருக்கிறது. புனித திருக்குர்ஆனும், நபிகள் (ஸல்) அவர்களின் வழிமுறையும் சரியாகப் பின்பற்றும் ஒரு முன்மாதிரி சமூகத்தையே நாமும் பின்பற்ற விரும்புகிறோம்.

4. எமது இலங்கை நாட்டைச்சேர்ந்த பல முக்கிய உலமாக்கள், புத்திஜீவிகள் ஷீஆ இஸ்லாத்தை ஆராய்ந்ததன் பின், அதனை சரிகண்டிருக்கிறார்கள். சமூகத்தில் காணப்படும் ஒரு தரப்பினருடைய அடக்குமுறைத்தனமான மேலாதிக்கப்போக்கு மற்றும் அரேபிய ரியால்களின் அழுத்தங்களின் காரணமாக அவர்கள் அடங்கி இருப்பதற்கும், அடக்கி வாசிப்பதற்கும் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் ஷீஆ இஸ்லாத்தை சரி கண்டிருப்பதானது எமக்கு இன்னுமொரு எடுத்துக்காட்டாகும்.

5. இஸ்லாத்தின் ஒரு முக்கிய பகுதி, எமது கண்களுக்குப் படாமலும் எமது செவிகளுக்கு கேட்காமலும் மறைத்து வைக்கப்பட்டுள்ளதை நாம் உணர்கிறோம். இந்தியாவிலிருந்து வந்த சூஃபி, தரீக்கா சார்ந்த இஸ்லாத்தையும், சவுதியிலிருந்து வந்த வஹ்ஹாபிசத்தையும் தான் எமது மக்கள் இன்று இஸ்லாமாகப் பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் குடும்பத்தினர் பின்பற்றிய நபிகளாரின் தூய்மையான இஸ்லாம் எம்மை வந்தடையவில்லை. நபிபெருமானாரின் குடும்பத்தை கண்ணியப்படுத்தி, நேசித்து, அவர்களைப் பின்பற்ற கட்டளையிடப்பட்ட எமது சமூகம் அவர்களைப் புறக்கணித்திருக்கிறது. அவர்களுக்கு உபகாரம் செய்யாதது மாத்திரமின்றி அவர்களுக்கு உபத்திரமும் செய்து அவர்கள் மீது கொலை வெறியாட்டம் செய்திருக்கிறது. கர்பலா முதல் இன்று வரை அத்துவம்சம் தொடர்ந்தும், எம்மை அத்தூய்மையான இஸ்லாத்தை விட்டும் தூரப்படுத்தியே வைத்திருக்கிறது. நபிகளாரிடமிருந்து அவர்களின் குடும்பத்தினரால் பாதுகாக்கப்பட்டு வரும் அறிவு ஞானங்களும், ஆன்மீக வழிகாட்டல்களும் இலைமறை காய்களாகவே இருந்து வருகின்றன.

அஹ்லுல்பைத்தினராகிய பெருமானாரின் குடும்பத்தின் மீது பிரியம் கொண்டு, அவர்களைப் பின்பற்றி வாழும் ஷீஆ முஸ்லிம்கள் அத்தூய்மையான இஸ்லாத்தைப் பின்பற்றுகின்றார்கள். அந்த இஸ்லாம் அநீதிக்கும், ஏகாதிபத்தியத்திற்கும் எதிரானது. மிகச்சரியான ஆன்மீகத்தையும், இஸ்லாமிய அரசியலையும், பண்பாட்டு மாண்புகளையும் கொண்டது. சகல விடயங்களிலும் முன்மாதிரியான நடைமுறைக்குச் சாத்தியமான இஸ்லாமியக் கருத்தியலைக் கொண்டது. இத்தூய்மையான இஸ்லாத்தின் வழிகாட்டல்களைப் பின்பற்றியதாகவே ஷீஆ இஸ்லாம் திகழ்கிறது.

Scroll to Top
Scroll to Top