முகமது நபியின் சுன்னாவிலிருந்து ஆக்கபூர்வமான அர்த்தங்களைப் பெற்றுக்கொள்வோம் – ஹிலால் அஹ்மத்

Let us derive constructive meanings from the Sunnah of Prophet Muhammad – Hilal Ahmad

ன்றைய உலகில் என்னைப் போன்ற ஒருவன் முகமது நபியின் கருத்துகளில் உள்ள தார்மிக முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசுவது மிகவும் கடினம். இதற்குக் குறைந்தது இரண்டு காரணங்கள் உள்ளன.

உலகளாவிய பிரச்சாரகர்கள் ஏற்கனவே இரு குழுக்களாகப் பிரிந்துள்ளனர். ‘இஸ்லாத்தின் காவலர்கள்’ ஒரு குழுவாகவும், ‘கருத்து/பேச்சு சுதந்திரத்தை வென்றவர்கள்’ மற்றொரு குழுவாகவும் உள்ளனர்.

ஐரோப்பாவில் நடந்த வன்முறை நிகழ்வுகள், அதற்காக எழுந்த அரசியல் எதிர்வினை ஆகியவற்றால், இது குறித்து தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். அதாவது, இரு தரப்பில் ஒரு தரப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த இரண்டு புரிதலின் அடிப்படையில் மட்டுமே முகமது நபியின் கருத்துகளை புரிந்துகொள்ள முடியாது.

இரண்டாவதாக, ஒரு தனிப்பட்ட குழப்பம் உள்ளது. எனது அடையாளத்தின் இரண்டு பண்புகளுக்கிடையில் ஒரு தீவிர மோதலை காண்கிறேன். இதனால், இஸ்லாம் மற்றும் நபிகள் நாயகத்தின் கட்டமைக்கப்பட்ட பிம்பத்திலிருந்து விடுபடுவது மிகவும் கடினமாக உள்ளது.

ஒரு ஆராய்ச்சியாளனாக, எனக்கு அனைத்தையும் ஒரு ஆய்வுக் கண்ணோட்டத்துடன் பார்ப்பதற்கான தேவை உள்ளது. முகமது நபி உட்பட வரலாற்றில் முக்கியமான அனைத்து நபர்களையும் விமர்சன ரீதியாக அணுக வேண்டிய தேவை உள்ளது. குர்ஆன் உள்ளிட்ட அனைத்து மத நூல்களையும் பகுத்து அறியும் நோக்கத்துடன் அணுகுவது அவசியமாக உள்ளது.

மற்றொருபுறம், பிறப்பின் அடிப்படையில் நான் ஒரு இஸ்லாமியன். ஆகையால், நபிகள் நாயகத்தை ‘அல்லாஹ்வின் தூதராகவும்’ ‘இறுதி நபியாகவும்’ நான் பார்க்க வேண்டும் என்று என்னிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது. குரானை ‘அறிவின் மூலமாக’ நான் கருத வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்புடைய இரண்டு கூறுகளைக் குறிப்பிட விரும்புகிறேன்.

முதலாவது என்னவென்றால், முகமது நபி கருத்துச் சுதந்திரத்தைத் தீவிரமாகப் பின்பற்றிய ஒருவர். தன்னை ‘அல்லாஹ்வின் தூதுவனாக’ அழைத்துக்கொள்வதற்குப் பதிலாக, தானும் ஒரு மனிதன் என்பதை அவர் எப்போதும் நினைவூட்டுவார்.

அனைவருடனும் உரையாடும் வகையிலான உறவை வளர்த்துக்கொண்டு, பிறரின் கருத்துகளையும் கேட்டுக்கொள்வார். இத்தகைய கருத்துப் பகிர்விற்கான மரபை ஆரம்பகால இஸ்லாமிய சமூகத்திலும் காணக் கூடும். முகமது நபியை ‘அல்லாஹ்வின் தூதராக’ ஏற்றுக்கொள்ளாதவர்களும் அவரிடம் முக்கியமான கேள்விகளைக் கேட்க அனுமதிக்கப்பட்டனர்.

இரு நகரங்களிலும் அமைதியை நிலைநாட்ட, மதீனாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நபியின் தோழர்களுக்கும், மக்காவின் இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கும் இடையிலான ஒப்பந்தம் இது. மக்கா ஆட்சியாளர்கள் முகமது நபியை ‘அல்லாஹ்வின் தூதராக’ அங்கீகரிக்கவில்லை. ஆகையால், அவர்களின் ஆவணத்தின் இறுதிப் பதிப்பில், நபிகளின் பெயர் ‘கடவுளின் தூதராக’ குறிப்பிடப்படாது என்று மக்கா ஆட்சியாளர்கள் தெரிவித்துவிட்டனர்.

முகமது நபி, சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ளவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கத் தொடர்ந்து போராடினார். இதிலிருந்து, நாம் இரண்டாவது கூற்றைப் புரிந்துகொள்ளலாம். ஏற்றத்தாழ்வு மற்றும் அநீதியை உருவாக்கும் கட்டமைப்பை அவர் கேள்விக்குள்ளாக்கினார்.

இதன் அடிப்படையில், அநியாயத்திற்கு எதிராகப் போராடவும், சமத்துவ மற்றும் நியாயமான சமூக ஒழுங்கை உருவாக்கவும் முகமது நபி அழைப்பு விடுத்தார். அவரது கடைசி ஹஜ் பிரசங்கம் இன்றளவிலும் மிகவும் பொருத்தமானது. அதில் அவர், அடிமைகள் மற்றும் பெண்களின் உரிமைகளுக்காகக் கடுமையாக வாதிட்டார்.

அப்போது, “அனைவரும் ஆதாம் மற்றும் ஏவாளிடமிருந்து வந்தவர்கள். அரபைச் சேர்ந்தவர்கள் மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தவோ, மற்றவர்கள் அரபைச் சேர்ந்தவர்களை ஆதிக்கம் செலுத்தவோ முடியாது. அதேபோல், வெள்ளையர்கள் கறுப்பினரை விட மேலானவர்களோ, கறுப்பினர்கள் வெள்ளையர்களை விட மேலானவர்களோ அல்ல” என்று முகமது நபி தெரிவித்தார்.

நான் அல்லாஹ்வை ஒரு அறிவின் மரபாகப் பார்க்கிறேன். அல்லாஹ் எங்களுக்கு, நபியின் கருத்துகளிலிருந்து ஆக்கபூர்வமான அர்த்தங்களைப் பெறுவதற்கான தைரியத்தை வழங்கட்டும்.

தி குவிண்ட்’ இணையத்தளத்தில் ஹிலால் அஹ்மத் எழுதிய கட்டுரையின் மொழியாக்கம்.

Source: www.aransei.com

Scroll to Top
Scroll to Top